இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முதல்முறையாக அமைச்சரவை பத்திரம்

இலங்கையில் நடைபெற்ற 30 ஆண்டு கால உள்நாட்டு போர் காரணமாக பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

போர் காலத்தில் பெருந்திரளானோர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் காணாமல் போனதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், பலர் கை, கால் உறுப்புகளை இழந்து, தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய இன்னொருவரை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும் அறிவோம்.

இந்நிலையில், உள்நாட்டு போர் காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

தாம் ஆட்சிக்கு வந்தால், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஆட்சி பீடம் ஏறினார்கள்.

இந்த இருவரும் ஆட்சிக்கு வந்து, தற்போது அவர்களின் ஆட்சி காலத்தின் இறுதித் தருணம் நெருங்கியுள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை இன்றும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளது கவலைக்குரிய விடயமாகும்.

சிறிசேன

குற்றம் செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டியது கட்டாயம் என்ற போதிலும், எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் கூட பல ஆண்டு காலமாக சிறைவாசம் அனுபவித்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த நிலையில், போர் நிறைவடைந்து ஒரு தசாப்தம் பூர்த்தியாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை இன்றும் கேள்வி குறியாகவே தொடர்கிறது.

அரசியல் கைதிகள் என யாரும் சிறைச்சாலைகளில் கிடையாது என அரசாங்கம் கூறிய வரும் நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் உள்ளதாக தமிழ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதியான முத்தையா சகாதேவன் கடந்த ஜுன் மாதம் 22ஆம் தேதி உடல் நலமின்றி சிறைச்சாலையில் உயிரிழந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கனகசபை தேவதாஸன் தன்னை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கடந்த 9 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்தார்.

சிறை

இந்த இரண்டு சம்பவங்களால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவாதம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸன் இழைத்த தவறு என்ன?

இலங்கை திரைப்பட கூட்டுதாபனத்தின் பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினராக கனகசபை தேவாதஸன் கடமையாற்றி வந்திருந்தார்.

யாழ்;ப்பாணம் – கரவெட்டி பகுதியைச் சேர்ந்த கனகசபை தேவதாஸன், கொழும்பு ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

கொழும்பு நியூ மெகஸின் சிறைச்சாலையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்;டுள்ள கனகசபை தேவதாஸன் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகாத நிலையில், அவரே தனது வழக்கை வாதிட்டுள்ளார்.

எனினும், நீதிமன்றம் அவருக்கு 2017ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.

இந்த பின்னணியில், மேன்முறையீட்டின் ஊடாக நீதிமன்றத்தில் தான் வாதிட்டு தனது விடுதலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தனக்கு போதியளவு சாட்சியங்களை திரட்ட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு சாட்சியங்களை திரட்ட வேண்டுமாயின், தன்னை குறிப்பிட்ட சில காலம் பிணையில் விடுவித்தால், தனக்கு சாட்சியங்களை திரட்ட உதவியாக இருக்கும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மனோ கணேசன்

இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத நிலையிலேயே, கனகசபை தேவதாஸன், கடந்த 9 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை சிறைச்சாலைக்குள் ஆரம்பித்திருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் மனோ கணேஷன், தமிழ்த் தேசியக்; கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தரப்பினர் கனகசபை தேவதாஸனை சிறைச்சாலையில் புதன்கிழமை சென்று சந்தித்துள்ளனர்.

கனகசபை தேவதாஸனுக்கு அமைச்சர் மனோ கணேஷன் வழங்கிய உறுதி மொழியை தொடர்ந்து, அவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நீராகாரம் அருந்தி நிறைவு செய்துக் கொண்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைக்கான அமைச்சரவை பத்திரம் முதல் தடவையாக தயாரிப்பு

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தான் முன்னெடுத்து வருவதாக சமூக ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கருமமொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேஷன் தெரிவிக்கின்றார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வகையிலான அமைச்சரவை பத்திரத்தை தான் தற்போது தயாரித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மெகசின் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 9 நாட்களாக முன்னெடுத்த தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸனின் உண்ணாவிரத போராட்டத்தை செயவாய்க்கிழமை நிறைவு செய்ததை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வகையில் தயாரிக்கப்படும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தான் அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மனோ கணேஷன் நம்பிக்கை வெளியிட்டார்.

பல அரசியல் கைதிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், பலர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், பலருக்கு விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அனைத்து விதமான தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும் வகையில் வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறான அமைச்சரவை பத்திரமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ரணில்படத்தின் காப்புரிமைNURPHOTO

இலங்கையில் முதலில் மக்கள் விடுதலை முன்னணியினர் கலவரங்களில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னரான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் கூறிய அமைச்சர், நாட்டில் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் பிரச்சினை உருவெடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் விடுதலை செய்யப்பட்டதாக அமைச்சர் நினைவூட்டினார்.

இந்த நிலையில், தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் பிரச்சினை உருவாகியுள்ளமையினால், தமிழ் அரசியல் கைதிகளை இலகுவில் விடுதலை செய்வதற்கான சந்தர்ப்பம் மற்றும் கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தன்னால் தயாரிக்கப்பட்டு வரும் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் எவ்வாறு பதில் அளிப்பார்கள் என்பதனை பொருத்து இருந்தே பார்க்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் மனோ கணேஷன் குறிப்பிட்டார்.

அருட்தந்தை சக்திவேல்
Image captionஅருட்தந்தை சக்திவேல்

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் – அருட்தந்தை சக்திவேல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி ஆட்சி அமைத்த அரசாங்கம் இன்று அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தாது செயற்படுகின்றமை வருத்தமளிக்கும் விடயம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவிக்கின்றார்.

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும் வகையில் அமைச்சர் மனோ கணேஷன் நடவடிக்கை எடுப்பாராயின், அது வரவேற்கத்தக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த அரசியல் கைதிகள் கட்டாயம் விடுதலை செய்யப்பட வேண்டியது அவசியமானது எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் குறிப்பிட்டார். -BBC_Tamil

TAGS: