கடந்த வாரமளவில் வவுனியா சென்று, மீண்டும் வீடு திரும்பும் பொருட்டு, வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் காத்திருந்தோம். இரண்டு பெரியவர்கள் உரையாடிக் கொண்டு இருந்தார்கள்.
“சண்டை நடந்த காலத்தில, அவங்கள் சைவம், வேதம் எண்டு பார்த்து விட்டே, குண்டு போட்டவங்கள்; பிடிச்சுக் கொண்டு போனவங்கள். தமிழன் எண்டு மட்டும் தானே பார்த்தவங்கள். அப்ப நாங்கள் ஏன் சைவம், வேதம் எண்டு வேற்றுமை காட்ட வேண்டும்….”
அவர்களின் உரையாடல், எங்களின் கவனத்தை, வெகுவாக ஈர்ந்தது. பொருள் பொதிந்ததாகவும் எளிமையாக விளங்கக் கூடியதாகவும் இருந்தது. மேலும் உண்மையானதாகவும் யதார்த்தமானதாகவும் காணப்பட்டது.
போர் நடைபெற்ற காலங்களில், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம், மடுமாதா தேவாலயம் உட்பட வடக்கு, கிழக்கு தேவாலயங்களில் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் மீது, தமிழர்கள் என்றே குண்டு போடப்பட்டது. இதேபோல வடக்கு, கிழக்கில் இந்துக் கோவில்களில் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் மீதும், தமிழர்கள் என்றே குண்டுகள் போடப்பட்டன.
அன்று, அவ்வாறு கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களை இன்று, இந்து, கிறிஸ்தவம் எனக் கூறுபோட்டு, வேரறுக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. தமிழ், தமிழர்கள் எனத் தமிழ் இனத்தின், தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுக் கொண்ட தமிழ் மக்களை இந்து, கிறிஸ்தவம் என வேறுபாடுகளைத் தோற்றுவிக்க, இன்று நேற்றல்ல, அன்று தொட்டே, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
1950களின் ஆரம்பங்களில், வித்தியாலங்கார பல்கலைக்கழக சிங்கள பௌத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் வண. ஹேவல் பொலரத்னசார, ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை வரைந்திருந்தார். அதில் கிறிஸ்தவர் ஒருவர், (தந்தை செல்வா) எவ்வாறு தமிழர்களுக்குத் தலைவராக முடியும் எனக் காட்டமாகக் கேட்டிருந்தார்.
“எனது மதம் கிறிஸ்தவம் என்பதைச் சுட்டிக் காட்டினீர்கள். பெரும்பாலானோர் இந்துக்களாக உள்ள தமிழர்களுக்கும் எனக்கும் அதிக தொடர்பில்லை என்பதை, அதனால் காட்ட முயன்றீர்கள். என்னையோ, மற்றக் கிறிஸ்தவர்களையோ, தலைவர் பதவிகளை ஏற்க முன்னர், மதம் மாறுமாறு கேட்காதது, தமிழ் இந்துக்களின் பெருமைக்குச் சான்று பகர்கின்றது” இதுவே, தந்தை செல்வாவின் பதிலாக அமைந்திருந்தது.
இதே காலப்பகுதியிலேயே, சிங்கள மொழி, பௌத்த மதம் எனப் பேரினவாதம் வெளிக்கிளம்புவதை, பண்டாரநாயக்க உணர்ந்து கொண்டார். அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவராகத் தன்னை மாற்றிக் கொள்ள விரும்பினார். அதற்காக, பண்டாரநாயக்க தனது உடை, மதம், வாழ்க்கை முறை என அனைத்தையும் மாற்றிக் கொண்டார்.
பண்டாரநாயக்க, அவ்விதம் தான் பிறந்த கிறிஸ்தவத்திலிருந்து பௌத்தத்துக்கு மாறியதாலேயே, பெரும்பான்மை பௌத்த மக்களைக் கொண்ட சிங்கள சமூகம், தங்களின் தலைவராக அவரை ஏற்றுக் கொண்டது.
ஆனால் தந்தை செல்வா, தான் பிறந்த, தான் நேசித்த கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றிக் கொண்டே, பெரும்பான்மை இந்து மக்களைக் கொண்ட, தமிழ்ச் சமூகத்தின் ஏக தலைவராக இறுதி மூச்சு வரை கோலோச்சினார்.
தந்தை செல்வா, 1947ஆம் ஆண்டு தொடக்கம் 1977ஆம் ஆண்டு வரை, சுமார் முப்பது ஆண்டுகள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் பாதுகாவலனாக விளங்கினார். ஏன், மலையகத் தமிழ் மக்களுக்கும் இணைத் தலைவராக விளங்கினார்.
இதுபோலவே, இன்றும் கூடத் தமிழ் மக்கள், இந்து, கிறிஸ்தவம் என மதங்கடந்த தமிழ் இனமாகவே, தங்களை வெளிப்படுத்த விரும்புகின்றனர். அதுவே, தங்களுக்குப் பலமும் நலமும் தரும் எனத் திடமாக நம்புகின்றனர்.
தமிழர்கள் என்ற அடையாளத்தைப் பெரும் பேறாகப் பார்க்கின்றார்கள். அதன் சிதைவு அல்லது சிதைப்பு, தங்களது இருப்பையே அழித்து விடும் என, நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள்.
ஆனாலும், மன்னார், திருக்கேதீஸ்வரம் கோவில் அலங்கார வளைவு விவகாரத்தில் நாம் (தமிழர்கள்) தோற்று விட்டோம். கோவிலுக்கு வளைவு அமைக்கும் அல்லது அமைக்காது விடும் விவகாரம், அந்த ஊர் மக்களது மனப்பூர்வமான சம்மதத்துடன், குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதேச சபை, அனுமதி வழங்கும் சாதாரண விடயமாகும்.
ஆனால், இன்று இந்த விடயம் அனைத்தையும் தாண்டி அனைவரையும் கடந்து, எகிறிக் குதித்து, இந்தியா வரை சென்று விட்டது. இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது? யார் பக்கம் தவறு உள்ளது என்பதை அலசுவது கட்டுரையின் நோக்கம் அல்ல. மாறாக, எமக்கிடையிலான புரிந்துணர்வு, இல்லாமல் போகச் செய்யப்பட்டு விட்டது என்பதே உண்மையான ஆதங்கம் ஆகும்.
இதேவேளை, தமிழர் பிரதேசங்களை விழுங்கும் ஓர் ஊடகமாகவே விகாரைகளையும் தாதுகோபுரங்களையும் பேரினவாதம் அமைத்து வருகின்றது. இது காலங்காலமாக, நம் நாட்டில் அரங்கேற்றப்பட்டு வரும் அசிங்கமான விடயமாகும். இதன் பிந்திய கரும்புள்ளியே, திருகோணமலை கன்னியா ஆகும்.
கன்னியா விவகாரத்தில், நாம் மதங்கடந்து தமிழ் இனமாகப் போராடி வருகின்றோம். கன்னியா விடயத்தில் கூட, நாம் உடனடியாக உள்ளூர் நீதிப்பொறிமுறையையே நாடினோம்.
அதன் வழியாகவே, விகாரை அமைப்புக்குத் தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டு உள்ளது. பொதுவாகவே எம்மவர்கள் இந்துக்களைப் பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.
தமிழ் மக்கள் 1980களின் ஆரம்பங்களில், இலங்கை அரசாங்கத்தின் பிடியிலிருந்து, தங்கள் இனத்தைக் காப்பாற்றுமாறு இந்தியாவிடம் சரண் அடைந்தார்கள். இதேவேளை, 40 ஆண்டுகள் கழிந்து, பல்வேறு சோதனைகள், வேதனைகள் கண்ட சமூகம், கோவில் வளைவு கட்ட, இன்று இந்தியாவின் அழுத்தத்தைக் கோருவதாக முடிவு செய்துள்ளது.
மீண்டும் ஒரு தடவை, இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது. யார் பக்கம் தவறு உள்ளது என்பது கட்டுரையின் நோக்கம் அல்ல. மாறாக, விடுதலைக்கு சுதந்திரத்துக்குப் பெரும் விலையைக் கொடுத்த சமூகம், வளைவு கட்ட அந்நிய தேசத்திடம் சரண் புகுந்து விட்டதே அல்லது சரண் புகவேண்டிய நிலை வந்துள்ளதே என்பதே கவலைக்குரிய விடமாகும்.
இவ்விடயத்தில், தமிழ்ச் சமூகத்தினது ஆன்மிக, சமூக அமைப்புகள் என அனைத்துப் பொது அமைப்புகளும் தோற்று விட்டன; தமிழ் மக்களது தலைமையைப் பிடிக்க முயன்று வருகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தோற்று விட்டன.
இன்றைய மாறிவரும் உலக ஒழுங்கில், தமிழர்களாக பல்வேறு அபாயங்களை நாம், தினசரி எதிர் கொண்டு வருகின்றோம். அவற்றைச் சமாளிக்க, எதிர்கொள்ளப் போதிய வலுவில்லாது திண்டாடுகின்றோம். இதிலிருந்து எங்களை மீட்க, மீட்பர்களாக யார் வரப்போகின்றார்கள் என ஏங்குகின்றோம்.
இதேவேளை, ஒட்டுமொத்த இலங்கைத்தீவும் சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரமே சொந்தமானது என்ற கருத்து மீண்டும் தேரர்களால் உயிரோட்டம் பெற்று வருகின்றது. இதனை அரசாங்கம் மறைமுகமாக ஆதரித்தும் அனுசரித்தும் வருகின்றது.
தமிழ் மக்களும் தமது மதநம்பிக்கைகளும் மதிப்பீடுகளும் தங்களது வளமான வாழ்வுக்கான, வலிமையான ஆதாரங்கள் எனத் திடமாக நம்புகின்றனர். ஆனாலும், அதைக் காட்டிலும் அடிப்படையில் தமிழ் இனத்தினது வாழ்வையும் வளத்தையும் காப்பாற்றவே நாம் ஒன்று சேர்ந்து நெடுகப் போராடினோம்; இனியும் போராட வேண்டும்.
‘நாம் தமிழர்கள்’ என்ற பொது நலனைக் காவு கொடுத்து விட்டு, மதம் என்ற சுய நலனுக்குள் சிக்கக் கூடாது. இல்லையேல், பெரும் புயல் போல சீறிப்பாய்ந்து வருகின்ற பேரினவாதத்துக்கு முன்னால் சுருண்டு போய் விடுவோம். பிரிந்து கிடந்தால், எம்மால் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது; எங்கள் தலை எழுத்தையே மாற்றி விடுவார்கள்.
இன்று தமிழினம் பெரும் நெருக்கடிக்குள் சிக்கி உள்ளது. இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களது தலைமைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. அவர்கள் மீது, தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். தாங்களாகவே பல களங்களில் தமிழ் மக்கள் தனித்துப் போராடி வருகின்றனர்.
ஆகவே, தமிழ்ச் சமூகத்தினது ஆன்மிக, சமூக அமைப்புகள் தமிழுக்காகக் களம் இறங்க வேண்டிய நேரம் வாசலுக்குள் வந்து விட்டது. எங்களைத் தயார்படுத்திக் கொண்டு, எங்கள் தலைமுறைக்காக வாழ வேண்டிய நேரமிது. தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும். வேண்டாத கற்பனை எதிரிகளுடன் போராடாது நிஜமான எதிரிகளுடன் போராட வேண்டிய நேரமிது.
புதிய வியூகங்களை வகுக்க வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சினைகள் என எதுவுமே இருக்க முடியாது. ஆகவே, எமக்குள் இருக்கின்ற வேண்டப்படாத தடுப்புகளை உடைத்து, சுதாகரிக்க வேண்டிய நேரமிது.
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழாக மட்டும் இருக்கட்டும், எங்களின் மூச்சும் பேச்சும் வீச்சும்!
-tamilmirror.lk