“ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கையில் நேரடியாக தாக்குதல்களை நடத்தவில்லை. அவர்கள் இங்கு சஹ்ரானை வழிநடத்தவும் இல்லை. எனினும், ஐ.எஸ். பயங்கரவாத கொள்கைக்கு ஈர்க்கப்பட்ட காரணத்தினால் தான் இங்கு சஹரான் தாக்குதல் நடத்தியுள்ளார்.” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீட்டிப்பது குறித்த விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ருவான் விஜயவர்த்தன மேலும் தெரிவித்துள்ளதாவது, “பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது சஹ்ரான் மற்றும் அவரது குழுவினரால் என்பது தெளிவாக தெரிந்துள்ளது. இதில் சர்வதேச நபர்களின் தொடர்புகள் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறினாலும் கூட அவர்கள் இந்த தாக்குதலை நேரடியாக நடத்தவில்லை. அவர்கள் இங்கு சஹரானை வழிநடத்தவும் இல்லை. எனினும் ஐ.எஸ் பயங்கரவாத கொள்கைக்கு இவர்கள் ஈர்க்கப்பட்ட காரணத்தினால் தான் இங்கு சஹரான் தாக்குதல் நடத்தியுள்ளார். அதேபோல் கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கும் மேலும் இரண்டு சம்பவங்களுக்கும் பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்துவதாக பயங்கரவாதிகள் சிலரது ஒளிப்பதிவு உரையாடல்களில் கேட்கக்கூடியதாக உள்ளது. ஆகவே ஆதாரங்களை வைத்தே நாம் இதனைக் கூறுகின்றோம்.” என்றுள்ளார்.
-4tamilmedia.com