‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’ என்று காத்திருந்த கூட்டமைப்பினர், புலிகள் போன பின்னர், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, அவர்களை ஏமாற்றி விட்டு, அரசாங்கத்துக்குத் துணை போவதாக, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஒரு ‘பிடி’ பிடித்திருந்தார்.
‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’ என்ற பழமொழி, அரசியலுக்கே நன்கு பொருந்தும். அரசியலில் இவ்வாறான எதிர்பார்ப்புகள் பலரிடம் இருப்பது உண்மை. எல்லோராலும் அரசியலில் வெற்றியைப் பெறமுடியாது.
வெற்றி பெற்றவர்கள் இறக்கும் போது, பலருக்கு அந்த இடம், போராடாமல் தானாகக் கிடைத்து விடுவதுண்டு. கூட்டமைப்புக்கும், விடுதலைப் புலிகளால்தான், அந்த இடம் தானாகவே வந்து கிடைத்தது என்பது, டக்ளஸ் தேவானந்தாவின் கணிப்பு.
இந்தப் பழமொழி, விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னரே, கூட்டமைப்பை நோக்கி கூறப்படுகிறதேயன்றி, அதற்கு முன்னர் அவ்வாறு கூறப்படவில்லை.
புலிகள் இருந்தவரை, அவர்களின் பினாமி என்றும், புலிகளின் அரசியல் பிரிவு என்றுமே கூட்டமைப்பை விமர்சித்து வந்தவர்கள் தான், இப்போது, அண்ணனின் திண்ணையைக் கைப்பற்றியவர்களாக, அவர்களை விமர்சிக்கிறார்கள்.
அதேவேளை, அண்ணன் உயிருடன் இருக்கும் போதே, திண்ணைக்குப் போட்டி போடுகின்ற நிலையும் தமிழ்த் தேசிய அரசியலில் நடந்து கொண்டிருப்பதை, யாரும் சரியாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில், நடந்து வருகின்ற வார்த்தைப் போரில், திண்ணைக்காக நடக்கின்ற பேரங்களும் அம்பலமாகியிருப்பது வேதனையான விடயம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டுக் கொண்டு, அதிலிருந்து வெளியேறிய இரண்டு தரப்புகளான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து, ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்திருந்தன.
கொள்கை ரீதியாக, ஒத்த போக்கில் செயற்படும் தமக்கிடையில், ஒரு பலமான கூட்டை உருவாக்குவதன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சவாலான ஓர் அணியை உருவாக்கலாம் என்றும் கருதப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கில், வெறுப்படைந்த தமிழ் மக்களில் பலரும், இவ்வாறான ஒரு மாற்று அரசியல் அணி, உருவாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அதற்கான முயற்சிகளிலும் சிலர் ஈடுபட்டனர்.
ஆனால், இந்த இரண்டு கட்சிகளும் இதுவரையில் இணக்கப்பாட்டை எட்டியதை விட, முட்டிக் கொண்டு நிற்கின்ற நிலையே அதிகம்.
பகிரங்கமாகப் பொதுவெளியில், இரண்டு கட்சிகளும் வார்த்தையை விட்டுக் கொண்டிருக்க, கூட்டணி முயற்சிகள் எல்லாமே, கானல் நீராக மறையத் தொடங்கி இருக்கின்றன.
இரண்டு கட்சிகளும் இப்போது மோதிக் கொண்டிருக்கின்ற பல்வேறு விடயங்களில், கூட்டணிக்கான முன்நிபந்தனை, அடுத்த தலைமை என்பன முக்கியமானவை.
கடந்தவாரம், இரண்டு கட்சிகளின் சார்பிலும், யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்புகளில், இந்த விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருந்ததைக் காணலாம்.
“முன்நிபந்தனையுடன், எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயார் இல்லை” என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் அருந்தவபாலன் அறிவித்திருந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சிகளைக் கூட்டில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிபந்தனை விதிப்பதையே, அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தாங்கள் முன்நிபந்தனை விதிக்கவில்லை என்றும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விக்னேஸ்வரன் தான் நிபந்தனை விதிக்கிறார்; அவரே பேச்சுகளை நிறுத்தினார் என்றும் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.
அண்மையில், யாழ்ப்பாணத்தில் இந்த இரண்டு கட்சிகளையும் சேர்த்துக் கூட்டு ஒன்றை அமைக்க வைப்பதற்காக, புலம்பெயர் தமிழர்கள் சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அந்த முயற்சி, முளையிலேயே கருகிப் போனது.
அதற்கு, இரண்டு தரப்புகளும் ‘தாம் காரணமல்ல’ என்று நியாயப்படுத்துகின்றன.
அதற்குப் பின்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் ஊடக அமைப்பும் இவ்வாறான முயற்சிகளில் இறங்கி, பேச்சு நடத்தியதாகவும், அது இருதரப்புப் பேச்சாக மாறுவதற்கிடையில், அந்த முயற்சிகள் பலனின்றி முடிந்ததாகவும் கூட தகவல்.
இந்தக் கூட்டணிப் பேச்சுகளில், உலாவருகின்ற முக்கியமான விடயத்துக்கு வருவோம்.
முன்னதாக விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட இணங்கினார் என்றும், தனக்குப் பின்னர், கூட்டணியின் தலைமையை கஜேந்திரகுமாருக்கு வழங்க இணங்கினார் என்றும் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் கூறியிருந்தார். இதுதொடர்பாக, அவர் எழுத்துமூலம் உறுதியளித்திருக்கிறார் எனவும், அவர் குறிப்பிட்டிருந்தார்.
விக்னேஸ்வரன் இப்போது, ஈ.பி.ஆர்.எல்.எவ் பக்கம் நின்று கொண்டு கூட்டணிக்கு வரத் தயங்குகிறார் என்பதே முன்னணியினரின் குற்றச்சாட்டு.
விக்னேஸ்வரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் இரகசியமாகப் பல கடிதப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இதனை அவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த இரகசியக் கடிதங்கள் சிலவற்றுக்கு, பதில் அனுப்பாத கஜேந்திரகுமார், அதன் உள்ளடக்கங்கள் சிலவற்றை, ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தி இருந்தார்.
இவ்வாறான ஒரு நிலையில், தனக்குப் பின்னர் தலைமையை கஜேந்திரகுமாருக்கு வழங்க விக்னேஸ்வரன் இணங்கினார் என்ற விடயம், தமிழ் அரசியலில் இப்போது தலைமைத்துவப் பிரச்சினை தான் மேலோங்கியுள்ளதா, அதுவே முதன்மைப்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
“விக்னேஸ்வரன் அவ்வாறான எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை” என்று அவரது கட்சியின் பேச்சாளர் அருந்தவபாலன் கூறியிருக்கிறார்.
ஆனால், அதுபற்றிய ஆதாரம் தம்மிடம் உள்ளது, அதனை வெளிப்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் அரசியலில் இருந்து விலகத் தயாரா என்று சவால் விடுத்திருக்கிறார் கஜேந்திரகுமார்.
தனக்குப் பின்னர், தலைமையைத் தருவதாக விக்னேஸ்வரன் கூறியிருந்தாலும், தாம் கொள்கையே முக்கியம் என்பதால், அவரது நிலைப்பாட்டுக்கு இணங்கவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறியிருக்கிறது.
அவ்வாறாயின், அடுத்த தலைமை பற்றிய சர்ச்சைக்குள் செல்லாமல் தவிர்த்திருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்யவில்லை.
எவ்வாறாயினும், இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணியில் தலைமைத்துவ பிரச்சினை முக்கியமானதாக எழுந்திருக்கிறது என்பதே, சாதாரண மக்களின் புரிதலாக உள்ளது.
கொள்கை, தமிழ் மக்களின் நலன் என்றெல்லாம் பேசிக் கொண்டே, அடுத்த தலைமைக்காக உள்ளுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலையில் தான், மாற்று அணி இருக்கிறது என்ற கேவலமான உண்மை, வெளியே வந்து கொண்டிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கூட, இதே பிரச்சினை இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஒரு கட்சியாக, நிலைத்திருக்கின்ற நிலையில் இவ்வாறான போட்டி உருவாவது வழக்கம்.
ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இன்னமும் இணைந்து ஒரு கூட்டை உருவாக்கவில்லை; அரசியல் ரீதியாகவும் வெற்றியைப் பதிவு செய்யவில்லை; இந்தக் கூட்டுக்கு, மக்களின் ஆதரவு இருக்கிறதா என்பதும் உறுதி செய்யப்படவில்லை. அதற்குள்ளாகவே, அடுத்த தலைமைக்காக மோதிக் கொள்ளுகின்ற அளவுக்கு, இரண்டு கட்சிகளினதும் நிலை தரம் தாழ்ந்து போயிருக்கிறது.
தமிழ்த் தேசிய அரசியலில், ஒருவரை ஒருவர் இழுத்து வீழ்த்துவது சாபக்கேடாகவே இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணியை, தலைமையை உருவாக்கப் போவதாக கிளம்பியவர்களே, இப்போது தமக்குள் மோதிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த மோதல் கொள்கை ரீதியானதாக, ஆக்கபூர்வமானதாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது.
தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தப்படும் ஒரு கட்டத்தில், இவர்கள் அடுத்த தலைமைக்காகப் போட்டி போட்டுக் கொண்டிருப்பது மக்களை வெறுப்புடன் பார்க்க வைக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்தியைக் கொண்டுள்ள தரப்புகள், அரசியல் ரீதியாக ஒன்றுபடத் தவறுகின்றன என்பதே யதார்த்தமாக உள்ளது.
தமிழ் அரசியல் சக்திகள் பலமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற தமிழ் மக்கள், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமக்கிடையில் மோதிக் கொண்டு, அண்ணனின் திண்ணைக்காக மோதிக் கொள்ளுகின்ற கட்டத்துக்கு வந்து சேர்ந்திருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மாற்று அரசியலை, மாற்று அணியை, மாற்றுத் தலைமையை முன்னிறுத்தி, அதைப் பலப்படுத்த வேண்டும் என்று பாடுபட்ட, அதற்காகக் குரல் கொடுத்த, அரசியலுக்கு வெளியே இருந்த எல்லோருமே, இப்போது ஓய்ந்து போகும் கட்டத்துக்கு வந்திருக்கிறார்கள்.
கூட்டமைப்புக்கு வெளியே உள்ள அதற்கு மாற்றான அணிகளை ஒன்றிணைப்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளும் அவ்வாறான தரப்புகள் காட்டும் பிடிச்சிராவித்தனங்களும் தான் அதற்குக் காரணம்.
இந்த மாற்றுத் தலைமையை, ஒருங்கிணைப்பதில் ‘அண்ணனின் திண்ணையும் கூட’, இப்போது முக்கியமான விவகாரமாக மாறியிருப்பதை, வேடிக்கை என்பதை விட வேதனை என்பதே பொருத்தம்.
தமிழ் மக்களுக்குத் தலைமையேற்கப் போவது யார் என்பதை, அரசியல் தலைவர்கள், தமக்குத் தாமே தீர்மானிக்க முற்படுகிறார்களே தவிர, தமக்கு யார் தலைமையேற்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்ற நிலையில் உள்ள தமிழ் மக்கனை அவர்கள் மறந்து விட்டார்கள்.
-http://tamilmirror.lk