‘இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்’ – அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தங்கள் நாட்டினர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

எதிர்வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.

தீவிரவாதிகள் எதிர்வரும் தினங்களில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தலாம் என அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சுற்றுலாத்தளங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், அரச அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், பிரமாண்டமாக நடத்தப்படும் விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்வுகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிரதான பகுதிகள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துபடத்தின் காப்புரிமைARMY.LK

மீண்டும் தாக்குதலுக்கு வாய்ப்பு இல்லை- இலங்கை இராணுவம்

ஆனால், இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என இலங்கை ராணுவம் தெரிவிக்கின்றது.

அமெரிக்காவால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை குறித்து பிபிசி தமிழ், ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவிடம் கேட்டபோது அவர் இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இதுவரை தமக்கு எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

அவ்வாறான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து மக்களுக்கு அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறினார்.

இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படாத வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுமித் அத்தபத்து நம்பிக்கை வெளியிட்டார்.

ஏப்ரல் 21 தாக்குதல்

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் சுமார் 263 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ஏப்ரல் 21 தாக்குதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கிறிஸ்தவ தேவாலங்கள், நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து ஒரே நேரத்தில் அந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே இலங்கைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

தற்கொலை குண்டுத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு, கத்தி தாக்குதல் மற்றும் லாரி தாக்குதல் ஆகியவற்றின் ஊடாக தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன், தாக்குதல் நடத்தும் 6 பேரின் பெயர்களையும் சர்வதேச புலனாய்வு நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கைக்கு அறிவித்திருந்தன.

இந்த நிலையிலேயே கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தீவிரவாதத் தாக்குதல் இலங்கையில் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil

TAGS: