‘சஹ்ரான் ஹாசிம் உடன் ஆயுதப் பயிற்சியெடுத்த நபர்’ இலங்கையில் கைது

இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமான ஜாமியா மில்லியா இஸ்லாமியா அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் முஹமட் நௌஸாட் உமர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முஹமட் நௌஸாட் உமருக்கு இலங்கையின் பல்வபெரு பகுதிகளிலும் ஏப்ரல் 21 நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை அரசால் கூறப்படும் சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பு இருந்ததாகவும், அவருடன் முஹமட் நௌஸாட் ஆயுதப் பயிற்சி எடுத்துள்ளதாகவும் போலீஸ் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

அந்தப் பயிற்சி எங்கு, எப்போது நடந்தது, அதன் நோக்கம் என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் வைத்து முஹமட் நௌஸாட் நேற்று அம்பாறை போலீஸாரினால் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டதாக கூறப்படும் மற்றுமொரு நபரும் அம்பாறை போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் முஹமட் சல்மான் என்ற சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இஸ்மாயில் முஹமட் சல்மான் என்ற சந்தேகநபர் ஒலுவில் பல்கலைக்கழகத்தின் மாணவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த சந்தேகநபர் பல்கலைக்கழகத்தில் இனவாதத்தை துண்டும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு வசம் உள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். -BBC_Tamil

TAGS: