ஒவ்வொரு முறை ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது, தமிழ் மக்களிடையே ஏதோ ஒரு வகையில், ஒரு கேள்வி, மீண்டும் மீண்டும் மீண்டெழுந்து விடுகிறது.
இலங்கையில் தமிழரொருவர் ஜனாதிபதியாக முடியாதா? ‘சிங்களப் பௌத்தர்’ ஒருவரே ஜனாதிபதியாக முடியும் என்ற தொனியிலான இந்தக் கருத்து, என்ன காரணத்தாலோ, மிக ஆழமாகப் பல தமிழர்களின் மனங்களில் பதிந்திருக்கிறது.
சட்ட ரீதியாகத் தமிழர் ஒருவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கோ, ஜனாதிபதி ஆவதற்கோ வௌிப்படையாகச் சட்டத்தில், இலங்கையின் அரசமைப்பின் படி, தடைகள் எதுவுமில்லை. இந்த விடயம், எத்தனை தடவை மீள எடுத்துரைக்கப்பட்டாலும், ‘தமிழர் ஜனாதிபதியாக முடியாது’ என்ற கருத்துத் தொடர்ந்தும் பல தமிழர்களின் மனங்களில் நீடித்திருக்கவே செய்கிறது.
ஆகவே, சட்டரீதியாக மட்டுமன்றி, அரசியல், சமூக ரீதியாகவும் இந்தக் கேள்வியை அணுகவேண்டியது அவசியமாகிறது.
இலங்கை ஒரு ஜனநாயகக் குடியரசு என்றால், இங்குள்ள மக்கள் அனைவரும் சமம் என்றால், இங்குள்ள சிறுபான்மை இனமொன்றுக்குத் தம்மால் ஒருபோதும் இந்த நாட்டின் தலைமைப் பதவியை வகிக்க முடியாது என்ற இரண்டாந்தரப் பிரஜையைப் போன்ற மனநிலை உருவாக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது, இலங்கை என்ற ஜனநாயகக் குடியரசுக் கட்டமைப்பில், அடிப்படைக் கோளாறொன்று இருப்பதையே கோடிட்டுக்காட்டி நிற்கிறது.
ஆகவே, இலங்கையில் தமிழரொருவர் ஜனாதிபதியாக முடியாதா என்ற கேள்வி, சட்டம் என்ற வரையறையைத் தாண்டியும் சிந்திக்க வேண்டியதொரு கேள்வியாக இருக்கிறது.
சட்டம் என்ன சொல்கிறது?
இலங்கை அரசமைப்பின் ஏழாவது அத்தியாயம், நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பற்றி உரைக்கிறது. அரசமைப்பின் 31வது சரத்தின் முதலாவது உபசரத்தானது, ஜனாதிபதியாகும் தகுதிகொண்ட எந்தக் குடிமகனும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றால், அல்லது அவர் இருமுறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டவராக இருக்கும் பட்சத்தில், வேறேதுமோர் அரசியல் கட்சியால் அல்லது தேர்தல் பதிவேட்டில் பதிவுசெய்துள்ள வாக்காளர் ஒருவரால் ஜனாதிபதி வேட்பாளராகப் பிரேரிக்கப்பட முடியும் என்று குறிப்பிடுகிறது.
ஜனாதிபதி ஆவதற்கான, தகுதி இழப்புகள் பற்றி, அரசமைப்பின் 92ஆவது சரத்து குறிப்பிடுகிறது. ஒருவர் அரசமைப்பின் 89ஆவது சரத்தின் படி, வாக்காளராவதற்கான தகுதியீனங்களைக் கொண்டிராதவராகவும் 35 வயதை எட்டியவராகவும் 91ஆம் சரத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினராவதற்கான தகுதியீனமடையாதவராகவும் இருமுறை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படாதவராகவும் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டவரல்லாதவராகவும் இருக்கும் ஒருவர், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட முடியும்.
ஆகவே, இலங்கைக் குடிமகன் எவரும், மேற்குறித்த தகுதியீனங்கள் அற்றவராக இருக்கும் போது, அவர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றால், வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டாலோ, அல்லது குறித்த நபர் இருமுறையேனும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டவராக இருக்கும் பட்சத்தில், ஒரு பதிவு செய்யப்பட்ட வாக்காளரின் நியமனத்தின்படி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.
மதமோ, இனமோ ஜனாதியாவதற்கான தகுதியாகவோ, தகுதியீனமாகவோ குறிப்பிடப்படவில்லை என்பது, இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகிறது. ஆகவே, மேற்குறித்த தகுதிகளின் அடிப்படையின் படி தமிழர்கள், முஸ்லிம்கள், மலாயர்கள், பறங்கியர்கள் என, இலங்கையின் எந்தப் பிரஜையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.
இலங்கையில் தமிழர், சிங்களப் பௌத்தரல்லாத சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர் ஒருவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது; அல்லது ஜனாதிபதியாக முடியாது என்ற நம்பிக்கை, இலங்கையில் பரவலாகக் காணப்படுவதற்கு, ஒருவகையில் இலங்கை அரசமைப்பின் ஒன்பதாவது சரத்தைப் பற்றிய தவறான புரிதல், ஒரு காரணமாக இருக்கலாம்.
இலங்கைக் குடியரசானது, பௌத்தத்துக்கு முதன்மை இடத்தை வழங்குவதுடன், புத்தசாசனத்தைக் காப்பதும், வளர்ப்பதும் அதன் கடமையாகும். அதேவேளை, 10 மற்றும் 14(1)(ந) சரத்துகள் மூலம், ஏனைய மதங்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தல் வேண்டும் என, இலங்கை அரசமைப்பின் ஒன்பதாவது சரத்து குறிப்பிடுகிறது.
இதன் அடிப்படையில் நோக்கும்போது, இலங்கையில் அரச மதமாகப் பௌத்தம் ஆகிறது; ஏனைய மதங்களைப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டாலும், அரசமைப்பின்படி, அவை தொடர்பில் அரசாங்கத்துக்கேதும் கடப்பாடோ, கடமையோ நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், பௌத்தமதத்தைப் (புத்த சாசனத்தைப்) பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசாங்கத்தின் கடமையாகிறது.
இந்தச் சரத்தை, இலகுவாக நீக்கவோ திருத்தவோ முடியாதபடி, அரசமைப்பு பாதுகாப்பையும் வழங்குகிறது. அதாவது, இந்த ஒன்பதாவது சரத்தை மாற்ற, நீக்க வேண்டுமென்றால், வெறுமனே நாடாளுமன்றில் 3 இல் 2 பெரும்பான்மை மட்டும் போதாது; அத்துடன் சர்வசன வாக்களிப்பு ஒன்றின் மூலம், பெரும்பான்மை பெறப்பட்டு, அதை ஜனாதிபதி 80ஆம் சரத்தின்படி, சான்றளிக்கும் பட்சத்திலேயே, இச்சரத்தை மாற்றவோ, நீக்கவோ முடியும்.
இந்தச் சரத்துத்தான், இலங்கையில் பௌத்தரல்லாதவர், ஜனாதிபதியாக முடியுமா என்ற ஐயப்பாடு பலருக்கும் எழுவதற்குக் காரணமாக இருக்கும்.
ஆனால், இது எவ்வகையில் பௌத்தரல்லாத ஒருவர் ஜனாதிபதியாவதைத் தடுக்கும் என்பது தெரியவில்லை. ஏனெனில், இந்தச் சரத்தை, எவ்வகையில் பொருள் கோடல் செய்தாலும், அது, இந்த நாட்டின் பௌத்தரல்லாத குடிமகன் ஒருவர், ஜனாதிபதியாவதைத் தகுதிநீக்கம் செய்யும் சரத்தாக அமையாது என்பது வௌிப்படை.
ஆகவே, நிச்சயமாகப் பௌத்தரல்லாத ஒருவர், தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில், ஜனாதிபதியாக முடியும். அது தொடர்பில் எந்தச் சட்டரீதியான கட்டுப்பாடுமில்லை.
1978ஆம் ஆண்டின், இரண்டாவது குடியரசு யாப்பின் கீழ், நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில், குமார் பொன்னம்பலம் போட்டியிட்டது முதல், கடைசியாக 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், சிவாஜிலிங்கம் போட்டியிட்டது வரை, சில தமிழர்களும் முஸ்லிம்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். ஆக, அரசமைப்பில் பலரும் எண்ணுவதுபோன்ற, ஒரு தடையிருந்தால் எவ்வாறு இவர்களது வேட்புமனு ஏற்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்கள்? இந்தத் தர்க்கத்தைப் புரிந்தாலே, அத்தகைய நம்பிக்கை, பிழை என்பது தெரிந்துவிடும்.
நடைமுறையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆகலாமா?
சட்டரீதியான நிலைப்பாடு, எவ்வாறாக இருப்பினும், நடைமுறை யதார்த்தத்தில், தமிழர் ஒருவர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற முடியுமா என்ற கேள்வி, இங்கு முக்கியமாகிறது. ஏனென்றால், தமிழர் ஒருவர் இலங்கையில் ஜனாதிபதியாக முடியாது என்பதற்குச் சட்டரீதியாக எந்தத் தடையீடும் இல்லையெனினும், யதார்த்தத்தில் அதன் சாத்தியப்பாடு என்பது வேறானதாக இருக்கிறது.
இதுதொடர்பில், முதலாவதாக ஜனாதிபதித் தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகிறது? ஜனாதிபதி, எவ்வாறு மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார் என்று பார்ப்பது அவசியகிறது.
அரசமைப்பின் 94ஆவது சரத்தும் அதன் உபபிரிவுகளும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றி விவரிக்கின்றது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஒற்றைமாற்று (தனிமாற்று) வாக்கு முறைப்படி நடத்தப்படும். இதன் பிரகாரம், மூன்று வேட்பாளர்களுக்குக் குறைவாகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில், வாக்காளர்கள் தமது முதலாவது, இரண்டாவது விருப்பத்தெரிவுகளைக் குறித்து வாக்களிக்கலாம். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுமிடத்து, மூன்றாவது விருப்பத் தெரிவையும் சேர்த்து வாக்களிக்கலாம்.
உதாரணமாக, அ, ஆ, இ என மூன்று நபர்கள் போட்டியிடுமிடத்து, வாக்காளர்கள் தாம் விரும்பியவர்களுக்கு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது விருப்புவாக்குகளை, விருப்ப வரிசையில் அளிக்கலாம். வாக்குகளின் எண்ணிக்கையில், முதலாவதாக முதன்மை விருப்பு வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். அதில் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக யார் வாக்குகளைப் பெறுகிறாரோ, அவரே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார்.
இலங்கையில் இதுவரை நடந்த சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் முதல்விருப்பு எண்ணிக்கையிலேயே செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப்பெற்றே, ஜனாதிபதிகள் தெரிவானார்கள். ஒருவேளை, எந்த வேட்பாளரும் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதம், அதற்கு மேற்பெறாதவிடத்து, முதல் விருப்பு எண்ணிக்கையில் அதிக தொகை வாக்குகள் பெற்ற, முதல் இருவர் தவிர்த்த ஏனையோர், போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.
இதன் பின்னர், போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பெற்ற முதல் விருப்பு வாக்குச்சீட்டுக்களிலிருந்து, போட்டியிலுள்ள இருவரில் எவருக்காவது இரண்டாம் விருப்பு வாக்கு இருந்தால், அது அவர்களது வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு எண்ணப்படும். மேலும், அதன் பின்னும் எஞ்சியுள்ள போட்டியிலிருந்து விலக்கப்பட்டவர்களின் வாக்குகளில் போட்டியிலுள்ள இருவரில் எவருக்காவது மூன்றாம் விருப்பு வாக்கு இருந்தால், அவையும் அவர்களது வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்பட்டு பெரும்பான்மை (சாதாரண பெரும்பான்மை) வாக்குகள் பெறுபவர், ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இம்முறையின் பின்னும், இருவரும் சம அளவான வாக்குகள் பெற்றிருந்தால் இருவரில் ஒருவருக்கு மேலதிக வாக்கு ஒன்று வழங்கப்படும். அந்த வாக்கு யாருக்கு வழங்கப்படும் என்பதை ஒரு ‘லொத்தர்’ (திருவுளச்சீட்டு) மூலம் தீர்மானிப்பார்கள். அந்த ஒரு வாக்கைப் பெற்றவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். இதுதான் 1978 இலிருந்து இலங்கையில் நடைமுறையிலிருக்கும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாம் குடியரசு அரசமைப்பின் படியிலான ஜனாதிபதித் தேர்தல் முறையாகும்.
ஆகவே, ஜனாதிபதித் தேர்தலொன்றில் வெற்றிபெற வேண்டுமானால், அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவேண்டும். இலங்கை அரசியலானது, கொள்கைகளின் அடிப்படையிலான, சிவில் தேசிய அரசியல் அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டிருந்தால், ஒரு வேட்பாளரின் இன, மத அடையாளம் என்பது, எதுவித முக்கியத்துவத்தையும் பெற்றிருக்காது.
ஆனால், இலங்கை அரசியல் என்பது இனம், மதம், தேசியவாதத்தின் படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு வாக்கு வங்கி, மிகத் தௌிவாக இனம், மதம், சமூகம், பிரதேசம் ஆகியவை வாரியாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இங்கு இனம், மதம், சமூகம் ஆகிய அடையாளம் என்பது, ஓர் அரசியலில் மிக முக்கியமானதொன்றாக இருக்கிறது.
தமிழர் ஒருவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தூண்டுதலாக எது அமைய முடியும்? இதுவரை காலமும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஒன்றிரண்டு தமிழர்களுக்கே, தமிழர்கள் பெருமளவில் வாக்களித்ததில்லை. இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழரின் ஒட்டுமொத்த இனவிகிதாசாரத்தைச் சேர்த்தாலும், அது ஏறத்தாழ 15சதவீதமானவே அமைகிறது. இத்தோடு, முஸ்லிம் மக்களைச் சேர்த்தால் கூட, ஒட்டுமொத்தமாக ஏறத்தாழ 25 சதவீதமாகவே அமையும்.
ஆகவே, தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வேண்டுமானால், நிச்சயமாக பெரும்பான்மைச் சிங்களவர்களின் கணிசமானளவு ஆதரவின்றி, அது சாத்தியமேயில்லை. இனம், மதம், சமூகம் என்ற ரீதியாகப் பிளவுபட்ட அரசியல் சமூகமொன்றில், ஒரு தமிழருக்கு, சிங்களவர் வாக்களிப்பதற்கான அரசியல் தேவையும் மூலதனமும் என்ன? அது எத்தகைய சந்தர்ப்பங்களில் சாத்தியமாகும், அவ்வாறு சிங்களமக்கள் ஏற்றுக்கொள்ளும் தமிழ் வேட்பாளர் ஒருவர் வரும் சந்தர்ப்பத்தில், தமிழ் மக்கள் அவரை ஆதரிப்பார்களா என்பதெல்லாம் தனித்து ஆராயப்பட வேண்டிய விடயங்களாகும்.
பொதுப்பரப்பில், சிங்கள மக்கள் விரும்பி ஆதரிக்கும் தமிழ் நபர்கள் மீது, அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களின் ஆதரவு குறைவாகவே இருந்திருக்கிறது. கதிர்காமர் முதல் முரளிதரன் வரை இதை நாம் கண்டுணரலாம். ஆகவே, இந்த இனம், மதம் சார்ந்த தேசியவாத அரசியல் கலாசாரத்தில், இன்றுள்ள குடிப்பரம்பலின் அடிப்படையில், தமிழரொருவர் ஜனாதிபதியாவது என்பதன் சாத்தியப்பாடுகள், மிகக் குறைவானதே; ஆனால், அதற்கான சட்ட ரீதியாக தடைகள் எதுவுமில்லை.
-http://tamilmirror.lk