சீரமைப்புத் திட்டங்களைவிட பிரதமர் பதவி ஒப்படைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே- பெட்ரியோட் வருத்தம்

ஆயுதப் படைகள் மற்றும் போலீஸ் படை முன்னாள் வீரர்கள் அமைப்பான பெட்ரியோட், பிரதமர் பதவி ஒப்படைப்புமீதான வாதங்களும் எதிர்வாதங்களும் அரசாங்கத்தின் சீரமைப்புத் திட்டங்களைவிட முக்கியத்துவம் பெற்று விட்டதை எண்ணிக் கவலையுறுதாகக் கூறியது.

நடந்து கொண்டிருக்கும் அதிகாரப் போராட்டம் “தேவையற்றது” என்று பெட்ரியோட் தலைவர் அர்ஷாட் ராஜி ஓர் அறிக்கையில் கூறினார்.

“பதவி, அதிகார மோகத்தால் சில அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் குப்பை அரசியலாகி விட்டது.

“ அவர்களின் நடத்தை நெறிமுறியற்றது. இவர்களும் பிஎன் திருட்டு அரசியல்வாதிகள் போன்றே நடந்து கொள்கிறார்கள்”, என்றவர் சாடினார்.

“அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள் மக்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என பெட்ரியோட் விரும்புகிறது

“அவர்கள் தங்கள் பொறுப்புகளில் கவனம் செலுத்தி மக்கள் எதற்காக அவர்களுக்கு வாக்களித்தார்களோ அந்தச் சீரமைப்பைச் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்”, என்றார்.