அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.அவ்வாறில்லாவிட்டால் மக்கள் ஒருபோதும் எம்மை மன்னிக்க மாட்டார்கள் என்பதுடன் மக்களை ஏமாற்ற முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
காணாமல்போனோர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் அரசாங்கத்திடமிருந்து சர்வதேசத்தினால் பெற்றுக்கொடுக்க முடியாத நீதியை பிளவு பட்ட தமிழ் அரசியல்வாதிகளால் பெற்றுக்கொடுக்க முடியுமா? தமிழ்த் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக அரசாங்கத்தின் மீது ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும். அவர்களின் ஒற்றுமையும், பதவியும் தான் அரசுக்கு எதிரான ஆயுதம் என்பதை உணரவேண்டும் என்று காணாமல்போனோரின் உறவுகள் அமையம் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
நாட்டின் இருபெரும் முக்கிய கட்சிகள் சர்வதேசத்தின் ஆதரவுடன் ஆட்சியமைத்த போது, அந்த அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய இயலுமை காணப்படும் என்ற எண்ணத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வரசாங்கத்திற்கு அனுசரணை வழங்கியது. அதன்படி படையினரால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகள் சில மீள ஒப்படைக்கப்பட்டமை, காணாமல்போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமை உள்ளிட்ட சில விடயங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும் அவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத நிலையே தொடர்கின்றது.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் எமது கோரிக்கைகளைத் தட்டிக்கழிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக படையினர் வசமுள்ள பொதுமக்கள் காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் இராணுவத்தினருக்குப் பொறுப்பாக ஜனாதிபதியே இருக்கின்றார். எனவே அவருக்கு இதுகுறித்து அழுத்தத்தை வழங்கினாலும் கூட, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையுள்ளது. எம்மால் அவருக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியுமே தவிர நிபந்தனைகளை விதிக்க முடியாது.
அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் அவ்வப்போது இலங்கைக்கு வந்து போகிறார்கள். அதன்போது ஐ.நா.வின் தீர்மானத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்ற அழுத்தத்தைப் பிரயோகித்தாலும், அவ்விடயத்தில் பொறுப்புக்கூறும் வகையில் அவர்களும் செயற்படுவதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எவையேனும் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் ஒருபோதும் எம்மை மன்னிக்க மாட்டார்கள். அதேபோன்று மக்களை ஏமாற்ற முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இந்த அரசாங்கம் எஞ்சியுள்ள தனது பதவிக்காலத்தில் பாராளுமன்றத்தில் கொண்டுவரும் பயன்தராத யோசனைகள் எவற்றுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கக் கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார்.
ஆனால் எதிர்வரும் தேர்தல்களில் கூட்டமைப்பு தனித்துப் போட்டியிட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் என்று நம்புவதாக ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டிருந்தாரே என்று வினவியபோது அதற்கு பதிலளித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என்பது குறித்து நாங்கள் தான் கலந்தாலோசித்து தீர்மானிக்க வேண்டும். அவ்வாறிருக்க நாங்கள் ஆதரவு வழங்குவோம் என்று அவர்களாக நம்புவது தவறாகும். எமது தீர்மானத்தை நாங்களே எடுப்போம் என்று தெரிவித்தார்.
-tamilcnn.lk