தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமான சொத்துக்கள் இலங்கையில் முடக்கம்: ஈஸ்டர் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய அமைப்பு

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்திய தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இதன்படி, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹரான் ஹசீம் உள்ளிட்ட அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் 13 கோடி ரூபாய் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சுமார் 263 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது.

இதையடுத்து, அந்த அமைப்பிற்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் திரட்டியிருந்தனர்.

இதன்படி, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் வெளியிட்டது.

இந்த சொத்துக்கள் மற்றும் கணக்குகள் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தனர். -BBC_Tamil

TAGS: