விடுதலைப்புலிகள் மீது இப்பொழுதும் தடை உள்ளது; தமிழின அரசியல் துரோகி சுமந்திரன்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர்மையுடன் குரல் கொடுத்து தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ அடித்தளமிட்டு வருகின்றது என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“எங்களுக்கு இருப்பது இரண்டு பலங்கள், ஒன்று எங்களது ஒற்றுமை, மற்றையது சர்வதேசம்.

சமாதானச் சூழ்நிலையிலே எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்று வரையறை இருக்கின்றது. அதேபோன்றுதான் ஜனநாயக முறையிலே எதைச் செய்ய முடியும் எதைச் செய்யக் கூடாது என்ற வரையறை இருக்கின்றது.

தழிழீழ விடுதலைப் புலிகள் மீது இப்பொழுதும் தடை இருக்கின்றது, அநியாயமான வேண்டுகோள்களை நாங்கள் விடுக்கவில்லை. அவர்களுக்குரியதை நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்குரியதைத்தான் நாங்கள் கேட்கின்றோம், இது நியாயமானது.

பெரும்பான்மை இனத்தவர்களை எதிர்ப்பதை விட அந்த சமூகத்திலுள்ள முற்போக்கு சக்திகளின் ஆதரவை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சோபித தேரரின் முதலாவது கூட்டத்திலும் நாங்கள் பங்குபற்றி நாட்டில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எமது நியாயமான விடயங்களை எடுத்துக் கூறுவதில் முன்னின்று உழைத்தோம்.

எமது உரிமைப் போராட்ட வரலாற்றில் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைத்தபோது சிங்கள மக்கள் எதிர்த்தார்கள். ஆனால், நியாயமான அதிகாரப் பகிர்வோடு ஆட்சியதிகாரங்ளைக் கோர முடியும். இதற்கு சர்வதேச ஆதரவும் இருக்கும். தன்னுடைய சட்டங்களை, தானே அமுல்படுத்துகிற சுயாதீனம் ஒரு நாட்டுக்கு இருக்கிறது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி அதற்கு அப்பாலும் சென்று அர்த்தமுள்ளதாக மாற்றுவேன் என்றார் மஹிந்த ராஜபக்ஷ. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இலங்கைக்கு ஒரு புதிய அரசியல் யாப்பு தேவை. ஜனநாயகப் பாதையை மீறி எதனையும் செய்வதால் எமக்கு சர்வதேச ஆதரவு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை என்றார்.

-athirvu.in

TAGS: