கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்: இலங்கை தமிழர்கள் கூறுவதென்ன?

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்கள் கேள்விகளுக்கு முதலில் கோட்டாபய பதில் கூற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க சிறந்த தலைமைத்துவத்தை வழங்கும் ஒரே தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ என அவரது தரப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.

உள்நாட்டு யுத்தத்தின்போது வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் தமது கடுமையான எதிர்ப்பினை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டனர்.

அனந்தி சசிதரன்
Image captionஅனந்தி சசிதரன்

“கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியிருப்பது இலங்கை ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது,” என்கிறார் அனந்தி சசிதரன்

இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியே அனந்தி சசிதரன்.

இவர் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமுமாக இருக்கின்றார்.

இவ்வாறான ஓர் அறிவிப்பின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பை பெறும் வகையில் பொதுஜன பெரமுன இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் கோட்டாபய ராஜபக்ஷவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனந்தி சசிதரன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, வெள்ளை வேன் கடத்தல்களுக்கும், ஊடகவியலாளர் கொல்லப்பட்டமைக்கும், காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் பாதுகாப்புச் செயலராக இருந்த கோட்டாபயதான் பொறுப்பேற்க வேண்டும் என குற்றம் சாட்டும் அனந்தி, ஜனாதிபதி தேர்தலில் அவரை களமிறக்கியுள்ளமையை நாங்கள் முற்றாக வெறுக்கிறோம் என்கிறார்.

யோகராசா கனகரஞ்சினி.
Image captionயோகராசா கனகரஞ்சினி.

“எமது இந்த அவல நிலைக்கு காரணம் கோட்டாபய ராஜபக்ஷதான். பதில் கூறவேண்டியவர் அவர்தான். அந்த வகையில் எமக்கான நீதியினை தரும் பட்சத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களாக இருப்போம்” என்கிறார் வலிந்து காணாமல் ஆக்கபட்டவரின் உறவினர் யோகராசா கனகரஞ்சினி.

“யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அந்த ஆட்சியின் சகோதரரான கோட்டபாய இன்று ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளார். எமக்கு எமது தாயகத்தில் வாழ்வதற்கு உரிமை உள்ளது. வருகின்றவர்கள் தமக்கு சாதகமாக தமிழ் பிரதிநிதிகளை பயன்படுத்தி தமது இருப்பை தக்கவைத்துக்கொள்பவர்களாக உள்ளனர். நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அரசு மாறலாம், ஆட்சி மாறலாம், ஆனால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா என்பது கேள்வியாக உள்ளது,” என்கிறார் கனகரஞ்சினி.

விஸ்வநாதன் பாலநந்தினி
Image captionவிஸ்வநாதன் பாலநந்தினி

“நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலம் முடியும் இக்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய போட்டியிடுகிறார். ” அவரது பொறுப்புக்கு கீழ்தான் எமது பிள்ளைகள் சரணடைந்தார்கள் என உண்மையில் நான் நினைகிறேன்,” என்கிறார் இறுதியுத்தத்தில் சரணடந்தவரது உறவினர் விஸ்வநாதன் பாலநந்தினி.

இறுதி யுத்தத்தின்போது பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய இருந்தபடியால் எமது பிள்ளைகளை ஒப்படைத்தமை அவருக்கு தெரியாமல் இருக்காது. இவ்வளவு காலமும் வெளிக்கொண்டுவரவில்லை. இனியேனும் வெளிக்கொண்டுவரவேண்டும். கேட்கும் கடப்பாடு எமக்கு உள்ளது. அதே நேரத்தில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் அவர்கள்தான் என்கிறார் பாலநந்தினி.

“இறுதி யுத்தம் இடம்பெற்றபோது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் கடந்த 10 வருடங்களாக நாம் வீதியில் ஏதிலிகளாக கண்ணீர் வடித்துக்கொண்டு எங்களுடைய உறவுகளை தேடிக்கொண்டிருக்கிறோம். எமக்கான நீதி, பொறுப்பு கூறலுடன் வேட்பாளர்கள் வரவேண்டும்,” என்கிறார் விக்னேஸ்வரன் செல்வநாயகி.

விக்னேஸ்வரன் செல்வநாயகி.
Image captionவிக்னேஸ்வரன் செல்வநாயகி.

“என் பிள்ளையை தேடி பூசா முகாமில் போய் கேட்கும்போது கோட்டாபயவிடம் கையெழுத்து வாங்கி வாருங்கள், பிள்ளையைக் காட்டுகிறோம்,” என சொன்னார்கள். அவரது கையெழுத்தை என்னால் பெறமுடியவில்லை. இன்றும் எனது பிள்ளையை தேடி காத்திருக்கிறேன்” என்கிறார் காணாமல் ஆக்கப்படவரின் உறவினர் செல்வநாயகி.

கோட்டாபய ஜனாதிபதியாக வரட்டும் அதபற்றி எமக்கு பிரச்சனையும் இல்லை, அக்கறையும் இல்லை. ஆனால் நாம் கையளித்த பிள்ளைகளை எம்மிடம் தந்து விட்டு ஜனாதிபதியாக வரட்டும். அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த நேரத்தில் கையளித்த பிள்ளைகளைதான் நாம் கேட்கிறோம். அதற்கு அவர் பொறுப்புக் கூறவேண்டும் என்கிறார்.

‘ராணுவ ஆட்சியை கொண்டு வந்திருக்க முடியும்’

யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தேவையேனில், யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் அப்போதே ராணுவ ஆட்சியை கொண்டு வந்திருக்க முடியும் என கூறிய கோட்டாபய ராஜபக்ஷ தரப்பை சேர்ந்த மஹிந்தானந்த அளுத்கமகே, அதற்கு மாறாக ஜனநாயகத்தை உறுதி செய்து, வடக்கில் துரித அபிவிருத்திகளை மேற்கொண்டதாக கூறினார்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்குடனேயே கோட்டாபய மீது ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான போலியான பிரசாரங்களை மேற்கொண்டு, தமிழ் மக்களை திசை திருப்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோட்டபாய ராஜபக்ஷ

வெள்ளை வேன் கலாசாரம், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்த நான்கு ஆண்டு காலப் பகுதியில் இந்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு மாத்திரமே வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், அபிவிருத்தி பணிகள் முழுமைப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அரசியல் தீர்வை பெற்றுத்தருவதாக கூறிய ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை காலமும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி என்ற ஒன்றையும் செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில், தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தை நிச்சயம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே நம்பிக்கை வெளியிட்டார். -BBC_Tamil

TAGS: