சஹ்ரான் ஹாஷிம் உடன் ஆயுதப் பயிற்சி – 16 வயது சிறுவன் கைது

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்த நௌபர் மௌலவியின் 16 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி என்று இலங்கை அரசு கூறும் சஹ்ரான் ஹாஷிம் நிறுவிய அமைப்பே தேசிய தௌஹித் ஜமாத் ஆகும்.

அம்பாறை போலீஸாரால் இந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சிறுவனின் தந்தையான நௌபர் மௌலவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வசம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இன்று கைதாகியுள்ள சிறுவனுக்கு தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பில் சேர்ந்தபின் இயற்பெயர் அல்லாமல் வேறு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் பெயரிலேயே அவர் இயங்கி வந்துள்ளார்.

அரச புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய இந்த இளம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஹ்ரான் ஹாஷிம்

பெயர் மாற்றத்துக்குப் பிறகு சஹ்ரான் ஹாஷிம் முன்னிலையில் சத்திய வாக்கு வழங்கியதாக 16 வயதாகும் சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேகுணாகொல்ல – அரக்யால பகுதியில் அம்பாறை போலீஸ் நிலைய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின்போதே சந்தேகநபரை கைதுசெய்ய முடிந்ததாகவும் ருவன் குணசேகர கூறுகின்றார்.

கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் நுவரெலியா பகுதியில் அமைக்கப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் முகாமில் பயிற்சிகளை பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சிறுவனுக்கு துப்பாக்கி பயன்படுத்தும் விதம் மற்றும் கைக்குண்டுகளை தயாரிக்கும் விதம் தொடர்பான காணொளிகளைக் காண்பித்து பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இளம் வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, இளம் வயது சிறார்கள் பலருக்கும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு பயிற்சிகளை வழங்கியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இளம் வயது சிறார்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அம்பாறை பகுதியில் இந்த மாத ஆரம்பத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் சுமார் 10 சந்தேக நபர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-BBC_Tamil

TAGS: