பலாலியில் இருந்து இந்தியாவுக்கு வருட இறுதிக்குள் விமான சேவை – ரணில்

இவ்வருட இறுதிக்குள் பலாலியில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூதூரில் இருந்து வெருகலுக்கான புனரமைக்கப்பட்ட 30 கிலோமீற்றர் நீளமான வீதியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நடைபெறுகின்றன. சர்வதேசத்தின் நிதி உதவியின் கீழ் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்தியாவுக்கு சென்று வரக்கூடிய வகையில் தற்போது பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இந்த வருட இறுதிக்குள் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளோம்.

அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பிலும் சர்வதேசத்தின் நிதி உதவியுடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்போம். இந்த நாட்டை நாங்கள் பொறுப்பெடுக்கும் போது, நாட்டில் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இருக்கவில்லை. எந்தவொரு நாடும் எமக்கு கடன் தருவதற்கு விரும்பவில்லை. ஆனால் தற்போது அனைத்தையும் நாங்கள் சரி செய்துள்ளோம்.

நாங்கள் இவ்வாறு மக்களின் தேவைகளை நிறைவேற்றும் போது, எங்களை விமர்சிப்பவர்களே அதிகமாக உள்ளனர். அப்படி இருந்தும் நாங்கள், விமர்சனங்களைப் பொருட்படுத்தாது மக்களுக்கான பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றோம்.

இப்போது எங்களிடம் போதிய நிதிவசதி இருக்கின்றது. அதனாலேயே கம்பெரலிய போன்ற பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்றோம். முன்னைய ஆட்சி இருந்திருந்தால் இவை இடம்பெற்றிருக்குமா?

ஆட்சியைப் பொறுப்பேற்றால் செய்யவேண்டிய அபிவிருத்தித் திட்டங்களை செய்து தான் ஆகவேண்டும். அடுத்தவர்களைப் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை. அவ்வாறு நாங்கள் செய்த அபிவிருத்தித் திட்டங்களின் பிரதிபலன்கள் இன்று தெரிகின்றது” என்று தெரிவித்தார்.

-https://tamilcnn.lk

TAGS: