“தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். எழுக தமிழ் பேரணியில் கட்சிகள் என்ற முறையில் இல்லாமல் தமிழர்கள் என்ற ரீதியில் கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டும்” என்று தமிழ் மக்கள் பேரவையின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையால் நடத்தப்படவுள்ள எழுக தமிழ் பேரணிக்கான பரப்புரையை நல்லூரில் ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “எழுக தமிழ் அடுத்த மாதம் 16ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதற்கு முன்னோடியாக நல்லூர்க் கந்தனை தரிசித்து ஆசிகளைப் பெற்று மக்களுக்கு இது சம்மந்தமான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறோம். எழுக தமிழ் 2019 கூடிய மக்களின் பங்கு பற்றுதலோடு நடைபெற வேண்டிய நிகழ்வாக இருக்கின்றது.
அதற்கு காரணம் தற்போதைய காலம் பல விதத்திலும் நாட்டில் ஒரு கொந்தளிப்பு நிலைமையை அரசியல் ரீதியாக ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த வேளையில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்று கேட்க வேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளது. ஆகையினால் அச் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதே நேரத்தில் தமிழ் மக்களின் வாக்கைப் பெற பலரும் பல பிரயத்தனத்தில் தற்போது ஈடுபட்டிருக்கின்றார்கள். ஆகையினால் நாங்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்த கருத்தை வெளியிட்டால் தான் எங்களுக்கு எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய சந்தரப்பம் சூழ்நிலை பிண்ணணி அதற்கேற்ற போல ஏற்படும். ஆகவே 2019 எழுக தமிழ் விமர்சையாக பலரது பங்குபற்றுதலுடன் நடைபெற இறைவனை பிரார்த்திக்கின்றோம். அதே வேளையில் எழுக தமிழ் பேரணியில் கட்சிகள் என்ற முறையில் இல்லாமல் தமிழர்கள் என்ற முறையில் நாங்கள் ஒன்று சேர்கிறோம்.
எந்தெந்தக் கட்சிகள் வருகின்றார்களோ அவர்கள் யாவரும் எங்களுடன் சேர்ந்து அதிலே ஈடுபட முடியும். ஆனால் சில கட்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சென்ற தடவையும் ஒரு கட்சி வந்த போதும் ஒரு இடத்தில் இருந்து திரும்பிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஆனால் எங்கள் கொள்கைகளை அதாவது தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம். ஆகவே கட்சிகள் என்ற முறையில் யார் யார் வருகிறார்கள் என்பதையும் பார்க்க கொள்கை என்ற அடிப்படையில் யார் யார் எங்களுடன் பங்குபற்றுகிறார்கள் என்பது தான் முக்கியம்.” என்றுள்ளார்.
-4tamilmedia.com