இலங்கை குண்டுவெடிப்பு: தற்கொலைதாரியின் உடல்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிர்ப்பு

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தியவரின் உடற் பாகங்களை மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்தமைக்கு எதிராகவும், அந்த உடற் பாகங்களை தோண்டியெடுக்குமாறும் கோரி, அந்தப் பிரதேச மக்கள் செவ்வாய்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை அரசால் குற்றம் சாட்டப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஷிம் தலைமையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் கிறிஸ்துவ தேவாலயங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. அதன்போது, மட்டக்களப்பு சியோன் தேவாயத்திலும் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களில் 263 பொதுமக்கள் பலியாகினர்.

சியோன் தேவாலயம் மீது பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர் காத்தான்குடியைச் சேர்ந்த எம்.என்.எம். ஆஸாத் என, விசாரணைகள் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்டார்.

சியோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்த பிறகுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionசியோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்த பிறகு

சியோன் தேவாலயம் மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட ஆஸாத்தின் தலை மற்றும் உடற் பகுதிகளை அவரின் தாயார் லத்தீபா பீவி உள்ளிட்டோர் அடையாளம் காட்டியிருந்தனர்.

மேலும், ஆஸாத்தின் உடல் எனச் சந்தேகிக்கப்பட்ட உடற்பாகங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் அவரின் தாயாரின் ரத்த மாதிரி ஆகியவற்றை வைத்து டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது.

சியோன் தேவாலயத்தில் கைப்பற்றப்பட்ட தற்கொலைதாரி ஆஸாத்தின் உடல் பாகங்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன.

ஈஸ்டர் தற்கொலைதாரியின் உடல்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு கடும் எதிர்ப்பு

இவ்வாறான பின்னணியில், ஆஸாத்தின் உடற் பாகங்களை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் கடந்த ஜுன் மாதம் உத்தரவிட்டது.

இதற்கமைய திங்கட்கிழமை தற்கொலைக் குண்டுதாரி ஆஸாத்தின் உடல்பாகங்கள் மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது.

இதனையடுத்தே, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தற்கொலைதாரியின் புதைக்கப்பட்ட உடல் பாகங்களை குறித்த மயானத்திலிருந்து அகற்றுமாறும் கோரி, செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் டயர்களை எரித்து போக்குவரத்தை சில மணி நேரம் முடக்கினர். மேலும், மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும் போக்குவரத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈஸ்டர் தற்கொலைதாரியின் உடல்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு கடும் எதிர்ப்பு

இதன்போது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்ததோடு, தடியடிப் பிரயோகங்களையும் மேற்கொண்டனர்.

சட்ட விரோத நடவடிக்கை

இது இவ்வாறிருக்க, தமது மாநகர சபைக்குட்ட பிரதேசமொன்றில் சடலமொன்றினை அடக்கம் செய்வதாயின் அதற்காக, மாநகர சபையின் அனுமதியினைப் பெற்றுக் கொள்தல் வேண்டும் என்றும், ஆனால் குறித்த தற்கொலைதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு மயானத்தில் அடக்கம் செய்யும் பொருட்டு மாநகர சபையின் அனுமதி பெறப்படவில்லை எனவும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

எனவே, குறித்த மயானத்தில் மேற்படி உடற்பாகங்கள் புதைக்கப்பட்டமையானது சட்டவிரோத நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யார் இந்த ஆஸாத்?

காத்தான்குடியை சொந்த இடமாகக் கொண்ட 34 வயதுடைய தற்கொலைக் குண்டுதாரி ஆஸாத், அம்பாறை மாவட்டம் – கல்முனை, இஸ்லாமாபாத் பகுதியில் 2012ஆம் ஆண்டு திருமணம் முடித்திருந்தார். அவரின் மனைவியின் பெயர் பைறூஸா.

அரசாங்கம் வெளியிட்ட ஆஸாத் படம்
Image captionஅரசாங்கம் வெளியிட்ட ஆஸாத் படம்

ஆஸாத் தற்கொலைத் தாக்குதலில் பலியான பின்னர், அவரின் மனைவி, சஹ்ரான் குழுவினரோடு இணைந்து சாய்ந்தமருதிலுள்ள வீடொன்றில் ஒளிந்திருந்தார். அதன்போது, அவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் சுற்றி வளைக்கப்பட்டனர். அதனால் அவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்து இறந்து போயினர்.

இந்த குண்டுவெடிப்பில் சஹ்ரானின் தாய், தந்தை மற்றும் சகோதரன் உள்ளிட்ட 15 பேர் மாண்டனர்.

ஆயினும், அந்த இடத்திலிருந்து சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் காயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

மொஹமட் சஹரான் ஹசீம்
Image captionமொஹமட் சஹரான் ஹசீம்

இதனையடுத்து சாய்ந்தமருதில் இவ்வாறு பலியானவர்களின் சடலங்களை தமது ஊரில் அடக்கம் செய்யக் கூடாது என, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் தீர்மானித்து அப்போது அறிவித்திருந்தது.

அதன் காரணமாக, சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் பலியான பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சடலங்களை அம்பாறை பிரதேசத்தில் சமய சடங்குகளின்றி போலீசார் அடக்கம் செய்தனர்.

ஆயினும், அந்த சம்பவத்தில் பலியான குழுந்தைகள் மற்றும் சிறுவர்களின் சடலங்கள் இஸ்லாமிய சமய சடங்குகளுடன் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil

TAGS: