புதிய அரசமைப்புத் தடைப்பட மைத்திரியே பிரதான காரணம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரங்கேற்றிய அரசியல் சூழ்ச்சியால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாமல் போனது. இதன்மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் புதிய அரசமைப்பு நிறைவேறும் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மைத்திரி தடுத்துவிட்டார் – தோற்கடித்துவிட்டார்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமராட்சி, புலோலி – காந்தியூர் சனசமூக நிலையத்தின் வருடாந்த விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தடைப்பட்டுப் போனமைக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியே காரணம் எனக் குற்றம் சுமத்தும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் வைத்து வெளியிட்ட கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் முதன்முறையாக நாடாளுமன்றத்தின் ஊடாக இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதை மையமாகக்கொண்டு – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மையமாகக்கொண்டு ஒரு புதிய அரசமைப்பை உருவாக்குவதற்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முஸ்லிம், மலையகத் தமிழ்க் கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவுடன் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

புதிய அரசமைப்பின் ஊடாக எங்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும், போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மீளக்கட்டியெழுப்பப்பட வேண்டும் என எமது பரிந்துரைகளை அந்த இடைக்கால அறிக்கையில் நாம் முன்வைத்திருந்தோம்.

அவ்வேளையில், புதிய அரசமைப்புக்கு எதிராக – இடைக்கால அறிக்கைக்கு எதிராக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரும், சில பிக்குகள் உள்ளிட்ட இனவாதிகளும் போர்க்கொடி தூக்கினார்கள். புதிய அரசமைப்பு ஊடாக நாடு பிளவுபடப் போகின்றது என்று தென்னிலங்கையில் மிகத் தீவிரமான பரப்புரைகளை அவர்கள் முன்னெடுத்தார்கள்.

அவர்களின் பரப்புரைகளுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரசியல் சூழ்ச்சியை ஏற்படுத்தினார். மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்தார்.

தமிழ் மக்களின் அமோக வாக்குகளால் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால, இறுதியில் எங்களுடன் கலந்து பேசாமல் நாடாளுமன்றத்தையும் கலைத்தார்.

ஜனாதிபதியின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றம் சென்றோம்;. அங்கு வாதாடினோம். ஜனாதிபதி அரசியல் சூழ்ச்சியை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்தது தவறு என்று சுட்டிக்காட்டினோம். அதன்பிராகாரம் உயர்நீதிமன்றில் எமக்கு நீதி கிடைத்தது.

மீண்டும் நாடாளுமன்றம் கூடியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனால், நாடாளுமன்றில் அரசுக்கு வழங்கியிருந்த தன்னுடைய ஆதரவை – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை ஜனாதிபதி மைத்திரி திருப்பப் பெற்றார்.

இதனால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை இழக்க வேண்டியிருந்தது. இதன்மூலம் புதிய அரசமைப்பு நிறைவேறும் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மைத்திரி தடுத்துவிட்டார் – தோற்கடித்துவிட்டார்.

புதிய அரசமைப்பை நிறைவேறுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் மிகவும் அவசியமானது.

அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உரையாற்றும்போது, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குத் தாங்கள்தான் உந்துசக்தியாக இருந்தோம் என்று பகிரங்கமாகப் பேசினார்.

இவை எல்லாவற்றையும் செய்த ஜனாதிபதிதான் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உரையாற்றும்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உள்ளிட்ட 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நீக்குவதற்குத் தான் தயார் என்று அறிவித்துள்ளார்” – என்றார்.

-tamilcnn.lk

TAGS: