விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் தனியரசு ஒன்றுக்கான கோரிக்கை முடிந்துவிட்டது. அந்தத் திட்டம் முடிந்துபோன பிறகு எமது அணுகுமுறையும் மாறவேண்டும். பேச்சுவார்த்தைகளை நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை. நாம் மீண்டும் ஆயுதங்களை ஏந்தித் தனிநாடு ஒன்றுக்காகப் போராடப் போவதில்லை. அது எமது குறிக்கோளும் அல்ல. ஒரு நாட்டிற்குள்தான் தீர்வு என்றால் பேச்சுவார்த்தை தான் முன்நோக்கிய ஒரேவழி.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன்.
இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் –
துரதிஷ்டவசமாக பேச்சுக்கள் நோக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையில் போதுமான மாற்றங்கள் ஏற்படவில்லை என்றே நான் நினைக்கின்றேன். நாம் இன்னமும் பழைய எதிர்ப்பு அரசியல் பழக்கத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கின்றோம். எதிர்ப்பு அரசியலைச் செய்யலாம், ஆனால் பெருமளவிற்கு ஈடுபாட்டில் நாட்டம் காட்ட வேண்டும். மற்றும் நாம் ஒரு நாட்டிற்குள்ளேயே வாழ்கின்றோம் என்ற புரிந்துணர்வு இருக்க வேண்டும். இந்த மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகும். எமது மக்கள் அந்த மாற்றத்திற்குத் தயாராக இருக்கின்றார்களென நான் நினைக்கின்றேன்.
கடந்த 5 வருடகாலத்தில் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற போதிலும் நாம் மேலும் கூடுதலான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்ற விளக்கப்பட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு அதிக பங்களிப்புச் செய்திருக்கக்கூடும்.
அடுத்தகட்டம் நாம் எவ்வாறு தெற்கிலுள்ள சக்திகளுடன் ஈடுபாட்டை கொண்டிருக்கப்போகின்றோம் என்பதில் முக்கிய நகர்வைக் காணக்கூடியதாக இருக்க வேண்டும். நாம் ஜே.வி.பியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறோம். அக்டோபர் 26 இற்குப் பின்னரான 51 நாள் அரசியல் நாடகத்திற்குப் பிறகு ஜே.வி.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் பக்கத்தில் ஒன்றாக நிற்கும் இருகட்சிகள் என்றும், ஒரு அரசியல் செயற்திட்டத்தில் அவையிரண்டும் ஒன்றாக வருவது வரவேற்கத்தக்க மாற்றம் என்றும் பலர் எம்மிடம் கூறினார்கள். அத்தகைய சக்திகளுடன் ஒன்றாக வருவதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் காணலாம் என்று என்னால் கூறமுடியாது. ஆனால் நீண்டகால அடிப்படையில் அதுவே செல்வதற்கான பாதை. இரண்டு பிரதான கட்சிகளில் ஏதாவது ஒன்றே ஆட்சியில் இருக்குமென்பதால் நாங்கள் இந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏதாவதொரு வகையில் ஒத்துழைக்க வேண்டியிருக்கலாம். ஆனால் உண்மையான மாற்றத்திற்கு நாம் தெற்கிலுள்ள ஜே.வி.பியுடனும், ஏனைய முற்போக்குக் கட்சிகளுடனும், மாற்று சக்திகளுடனும் பணியாற்ற வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கின்றேன். – என்றார்.
-https://tamilcnn.lk