இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றும் அவர்களை தேடி பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
யுத்தம் நிறைவடைந்த இலங்கையில் அமைதி நிலவுகின்ற இந்த சந்தர்ப்பத்திலும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதி கிடைக்காத நிலைமையே நிலவி வருகிறது.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போதிலும், காணாமல் போனோர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில், யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் முடிவடைந்துள்ள பின்னணியில், காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மாதம்தோறும் நிவாரணத் தொகை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை கொண்டுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மாதேம்தோறும் 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உறுதி செய்யப்பட்ட காணாமற் போனவர்களுக்கான இடைகால நிவாரணத்தை வழங்குதல் என்ற தலைப்பின் கீழ் அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை கொண்டு வரும் பயனாளிகள், 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி இந்த நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண தொகையை நிராகரிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி
அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிவாரண தொகையை நிராகரிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை வட மாகாணத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.
உள்நாட்டு விசாரணைகளின் மீது நம்பிக்கையை இழந்துள்ள தமக்கு சர்வதேச விசாரணை அவசியம் எனவும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா குறிப்பிடுகின்றார்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பதில்
ஒரு சில தரப்பினர் மாத்திரமே இந்த நிவாரண தொகையை நிராகரிப்பதாகவும், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பலர் இந்த நிவாரண தொகையை எதிர்பார்த்துள்ளதாகவும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கின்றார்.
சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.
இந்த நிவாரண தொகையை எதிர்பார்த்து பலர் காத்திருப்பதாகவும், தேவைப்படுபவர்கள் மாத்திரம் வந்து அந்த நிவாரணத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எந்தவொரு தரப்பினருக்கும் அழுத்தங்களை பிரயோகித்து, இந்த நிவாரண தொகையை வழங்க முடியாது எனவும் சாலிய பீரிஸ் தெரிவிக்கின்றார்.
அத்துடன், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை வடமாகாணத்திலிருந்து ஒருபோதும் அப்புறப்படுத்த முடியாது என கூறிய அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், வட மாகாணத்திலுள்ள தமது இரண்டு அலுவலகங்களினால் பலர் நன்மை பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார். -BBC_Tamil