2020 இறுதியிலேயே, மேலவையில் பி.எச். ஆதிக்கம் செலுத்த முடியும்

சில செனட்டர்களின் பதவி காலம் விரைவில் நிறைவடைவதைத் தொடர்ந்து, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அடுத்தாண்டு நவம்பரிலேயே மேலவையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த முடியும் எனத் தெரிகிறது.

மேலவையில் 70 உறுப்பினர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

தற்போது, பி.எச். சார்பில் 26 செனட்டர்களும், பிஎன் கூட்டணி சார்பில் 27 பேரும், அதன் புதிய கூட்டாளியான பாஸ் சார்பில் நால்வரும் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

மேலும், 11 செனட்டர்கள் நடுநிலை கட்சி அல்லது சிறப்பு ஆர்வலர் குழுக்களைப் பிரதிநிதித்துள்ளனர். விரைவில் இந்தக் குழுவில் மூன்று இடங்கள் காலியாக உள்ளன.

அக்டோபர் மாதத்தில், மனித உரிமை ஆர்வலர் ஐவி ஜோசியா மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அரசாங்க வட்டாரங்கள் மலேசியாகினிக்குத் தெரிவித்துள்ளன. ஜோசியா மனித உரிமைகள் மேம்பாட்டுக் கழகத்தின் (புரோஹாம்) பொதுச் செயலாளர் ஆவார்.

புதிய நியமனங்கள் மேலவையில் அதிகார சமநிலையை மாற்றாது என்று தெரிகிறது.

இருப்பினும், 2020-ல், மேலவையின் சபாநாயகர் எஸ் ஏ விக்னேஸ்வரன் உட்பட, எழுவரின் பதவி காலம் நிறைவடைய உள்ளது. அதில் ஆறு பேர் பி.என்.-ஐச் சார்ந்தவர்கள்.

எனவே, நவம்பர் 2020-லேயே பி.எச். மேலவையில் ஆதிக்கம் செலுத்தும் என்று தெரிகிறது.

பொதுவாக, அனைத்து மசோதாக்களும் யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் பார்வைக்காக அனுப்பப்படுவதற்கு முன்பு, மக்களவை மற்றும் மேலவை பிரதிநிதிகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை மேலவைப் பிரதிநிதிகள் நிராகரித்தால், அம்மசோதாவைப் பேரரசரிடம் சமர்ப்பிக்க அதிகபட்சமாக ஒரு வருடம் கூட தாமதப்படுத்த முடியும்.