நெருக்கடிக் காலங்களில் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிப்பதற்கு நான்கில் மூன்று மலேசியர் ஆதரவு

நான்கில் மூன்று மலேசியர்கள் நெருக்கடிக் காலங்களின்போது தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களூக்குத் தடைபோட்டு முடக்கிப் போடுவதை ஆதரிக்கிறார்கள்.

Ipsos Global என்னும் ஓர் ஆய்வு நிறுவனம் உலகளவில் மேற்கொண்ட ஆய்வில் ஆய்வில் கலந்துகொண்ட மலேசியரில் 75 விழுக்காட்டினர் சமூக வலைத்தளத் தடைவிதிப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களுக்குத் தற்காலிகத் தடை விதிப்பதைப் பெருமளவில் ஆதரிக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு (88 விழுக்காடு) அடுத்து மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆய்வில் கலந்துகொண்ட மலேசியரில் முக்கால் வாசிப் பேர், எப்போது சமூக வலைத்தளங்களை முடக்கி வைப்பது என்பது அரசாங்கம் நன்றாகத் தெரியும் என்றும் நம்புகிறார்கள்.

“சமூக வலைத்தளங்களுக்குத் தற்காலிக தடை விதிப்பதை ஆதரிக்கும் மற்ற நாடுகளாவன: சவூதி அராபியா (73 விழுக்காடு), சீனா (72 விழுக்காடு), பிரிட்டன் (69 விழுக்காடு)”, என அந்நிறுவனம் கூறிற்று.

27 நாடுகளில் 20,000 பேரிடம் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.