தமிழ் மக்களின் இருப்புக்காக எழுக தமிழில் அனைவரும் கலந்து கொள்வோம்-சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது இன்று வரை எட்டப்படவில்லை என்பதுடன் இறுதிப் போரின்போது நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மனித குலத்திற்கு எதிராக நாடாத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிந்து நீதி நிலைநாட்டப்படவில்லை.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியும் இன்று வரை வழங்கப்படவில்லை அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிப்பதற்கு அரசாங்கத்திற்கு இன்னமும் துணிவு வரவில்லை.
அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலின் மூலம் கடந்த நான்கு வரவுசெலவுத்திட்டத்திலும் பாதுகாப்பு தரப்பினரின் செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகரித்த நிதிக்கும் ஆதரவு அளித்துக் கூட எமது மக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை மாறாக கையெடுத்து வணங்கவேண்டிய புத்தபெருமானை நில ஆக்கிரமிப்பாளராகவும் அரச அனுசரணையுடன் வடக்கு கிழக்கில் தமிழர்கள் தாயக பிரதேசங்களில் சிங்கள குடியேற்றத்தின் சின்னமாகவும் இலங்கை அரசாங்கம் முன்னிலைப்டுத்துகின்றது.புதிய அரசாங்கம் இரண்டு பிரதான கட்சிகளை உள்ளடக்கியதாக உள்ளது அதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டுவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனவுகள் கூட தகர்த்தெறியப்பட்டுள்ளது.ஆகவே எமது நாளாந்த பிரச்சினை முதல் அரசியல் தீர்வுவரை எந்தவொரு விடயமும் தீர்க்கப்படவில்லை என்பதை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் மிகவும் வலிமையுடனும் உறுதியுடனும் ஜனநாயக ரீதியிலும் போராடுவதற்கு தமிழ் மக்கள் பேரவை ஒன்றே எமக்கு இன்று இருக்கும் ஒரு பிரதான தளமாகும்எனவே அனைத்து தமிழ் மக்களும் தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளும் தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புக்களும் எதிர்வரும் 16.09.2019ம் திகதி காலை தமிழ் மக்கள் பேரவையில் முன்னெடுக்கப்பட்டுவரும் எழுக தமிழ் 2019ல் அணிதிரள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

அரசியல் கட்சிகளுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் உங்களின் கட்சிகளின் இருப்புக்காக நீங்கள் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தாலும் தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்காகவும் அதன் இருப்பினையும் அதன் அடையாளத்தையும் நாம் தக்கவைப்பதற்கு நீங்கள் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் அரசியல் நடவடிக்கை முன்னெடுப்பதற்கு எழுக தமிழில் இணையவேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

-tamilcnn.lk

TAGS: