வடக்கில் இராணுவத்தார், பொலிஸாரால் கையகப்படுத்தி பயன்படுத்தப்பட்டு வரும் தனியார் காணிகளை அடையாளம் கண்டு, அவற்றை உடனடியாக மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், முன்னர் வட மாகாண ஆளுநரால் யாழ். மாவட்டத்திலுள்ள தனியார் காணிகளை அடையாளங்கண்டு அவற்றை உடனடியாக கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிமைக்கோரல் விண்ணப்பப் படிவங்கள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படுவதாக ஆளுநரின் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி அடுத்த கட்டமாக ஏனைய மாவட்டங்களிலும் முப்படையினர், பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரிமையாளர்கள் அறியத்தர வேண்டுமென்றும், மேலும் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றுள்ளவர்களும் தங்களது காணிகளுக்கான விசேட விண்ணப்பப் படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் கையளிக்க வேண்டுமெனவும் ஆளுநரின் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-tamilmirror.lk