தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவருடனும் பேசத் தயார்; சஜித் தரப்பிடம் சம்பந்தன் திட்டவட்டம்!

“ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் எமக்கு பிரச்சினையில்லை. கட்சியின் தரப்பில் களமிறங்கும் வேட்பாளர் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வினை வழங்கப்போகின்றார் என்பதே எமக்கு முக்கியம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“அத்துடன், தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுகொள்ளும், எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் நபராக இருந்தால் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தும் நபருடன் நாம் பேசி அவரை ஆதரிப்பது குறித்து தீர்மானம் எடுப்போம்.” என்றும் சஜித் தரப்பு பிரதிநிதிகளுடனான பேச்சுவர்த்தையில் இரா.சம்பந்தன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை களமிறக்கும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் சஜித் பிரேமதாச அணியினர் தமக்கான ஆதரவை திரட்டும் வகையில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிங்கள கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் ஆகியோரை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தமக்கான ஆதரவை கோரியுள்ளனர். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நாளை செவ்வாய்க்கிழமை காலை கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டு தமது நிலைப்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன், பிற்பகல் 03.00 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

-http://4tamilmedia.com

TAGS: