இலங்கை எழுக தமிழ் பேரணி: தமிழர்களுக்கு இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்றுத் தரவேண்டும் – விக்னேஸ்வரன் வேண்டுகோள்

இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமது தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில் தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் என இலங்கைத் தமிழர்கள் நம்புவதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் இணைந்துக் கொண்டு கருத்து தெரித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழர்களின் போராட்டங்களுக்கு தமிழ் நாட்டு உறவுகள் தமது ஆதரவை தெரிவித்து வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா சுயநிர்ணய உரிமை பெற்றுத் தரவேண்டும்: விக்னேஸ்வரன்

இலங்கை இனப் பிரச்சினை தொடர்பில் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வரும் மென்போக்கு நிலையில் இருந்து விலகி, தமிழ் மக்களின் இருப்பையும், அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை தாமதமின்றி எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களை வலியுறுத்திய ‘எழுக தமிழ்” பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உள் சுற்று வட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து இருவேறு பேரணிகள் ஆரம்பமாகி, யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்திற்கு வந்து சேர்ந்தன.

இலங்கை இனப் பிரச்சினை: "இந்தியா துணிச்சலான நடவடிக்கை எடுக்க வேண்டும்" - 'எழுக தமிழ்' பேரணி

யுத்தக் குற்ற விசாரணைகள் சர்வதேசத்தின் தலையீட்டில் நடைபெற வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், சிங்கள பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும், இடம்பெயர்ந்தோர் உடனடியாக சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரேமசந்திரன், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் காலத்துக்கு காலம் ஏற்பட்ட வெளிநாட்டு தலையீடுகளாலோ, சமரச முயற்சிகளாலோ மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியவில்லை என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இலங்கை இனப் பிரச்சினை: "இந்தியா துணிச்சலான நடவடிக்கை எடுக்க வேண்டும்" - 'எழுக தமிழ்' பேரணி

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் இலங்கை சர்வதேச ரீதியில் ஒரு பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புக்கள் தொடர்வதாகவும் குறிப்பட்டிருந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கான இன இருப்பை இல்லாது செய்யும் வகையில் அரச இயந்திரமொன்று முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான இன அடக்குமுறைகளை இல்லாது செய்யும் வகையிலேயே எழுக தமிழ் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

தமிழர்களுக்கான நிரந்தர தீர்வுத் திட்டத்தை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என தாம் வலியுறுத்துவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெரும்பான பகுதிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. -BBC_Tamil

TAGS: