ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் மூத்தோர் நடவடிக்கை மையம் அமைக்க திட்டம்

அரசாங்கம் நாட்டில் உள்ள ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் பூசாட் எக்டிவிட்டி வர்கா மாஸ் எனப்படும் மூத்தோர் நடவடிக்கை மையம் அமைக்கத் திட்டமிடுகிறது. மூத்த குடிமக்கள் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுச் சுறுசுறுப்பாக இருப்பதை ஊக்குவிக்க அம்மையங்கள் அமைக்கப்படுவதாக துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.

இப்போதைக்கு அப்படிப்பட்ட 88 மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் மூத்த குடிமக்கள் 36,931 பேர் அவற்றால் பயனடைந்து வருகிறார்கள் என்றும் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமான வான் அசிசா தெரிவித்தார்.

“மூத்த குடிமக்களுக்காகவும் மற்ற தரப்பினருக்காகவும் மேலும் பல வசதிகளைச் செய்துத்தர அரசாங்கம் திட்டமிடுகிறது”, என்று வான் அசிசா இன்று செர்டாங்கில், யுனிவர்சிடி புத்ரா மலேசியாவில்,   மலேசியா முதுமை ஆராய்ச்சிக் கழகத்தைத் தொடக்கிவைத்தபோது கூறினார்.