நீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ!

கொடுக்கில் இனவாத- மதவாத விஷத்தை கொண்டு அலையும் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்று கடந்த திங்கட்கிழமை நீதிமன்ற தீர்ப்பின் மீதெறி நின்று நர்த்தனமாடியிருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டிய பொலிஸாரோ, அதனைப் புறந்தள்ளி பிக்குகளின் ஆட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கியிருக்கின்றனர்.

செம்மலை- நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தினை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அந்த விகாரையின் விகாராதிபதி அண்மையில் சுகயீனம் காரணமாக மரணமடைந்தார். அந்தத் தேரரின் உடலை எடுத்துக் கொண்டு பௌத்த பிக்குகள் குழுவொன்று கொழும்பிலிருந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை நோக்கி வந்தது. தேரரின் உடலை ஆலய வளாகத்துக்கு எப்படியாவது எரியூட்டிவிட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அந்த நோக்கத்தை, நீதிமன்ற தீர்ப்பைப் புறந்தள்ளி அவர்கள் நிறைவேற்றியும் இருக்கிறார்கள்.

எந்தவொரு காரணம் கொண்டும் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் தேரரின் உடல் எரியூட்டப்படக்கூடாது என்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், ஆலயத்துக்கு முன்பாகவுள்ள இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில் எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸாருக்கு பணித்திருந்தது. ஆனால், பொலிஸார் அதனை நிறைவேற்றவில்லை. மாறாக, நீதிமன்றத் தீர்ப்பினை (உத்தரவினை) நிறைவேற்றுமாறு மனுதாரரின் சட்டத்தரணிகள் பொலிஸாரைக் கோரிய போது, சட்டத்தரணிகளை அச்சுறுத்தி அகற்றும் வேலைகளை மாத்திரம் செய்திருக்கிறார்கள். நீதிமன்ற அவமதிப்புக்கு பொலிஸாரும் ஒத்துழைத்திருக்கிறார்கள்.

அந்தச் சமயத்தில், “…இது பௌத்த பூமி, தேரர்களுக்குத்தான் முதலிடம். இங்கு நீதிமன்றத்துக்கு வேலையில்லை…” என்று சட்டத்தரணி ஒருவரை தேரர் ஒருவர் அச்சுறுத்துகிறார். அவரை வழிநடத்தும் ஞானசார தேரர், சில மாதங்களுக்கு முன்னர்தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனைபெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானார். ஆனாலும், நீதிமன்றங்கள் தங்களுக்கு கீழ்த்தான் என்கிற ஒற்றைச் சிந்தனையின் வழி நின்று எதனையும் சாதித்துவிடுவோம் என்கிற இறுமாப்பினை அந்தத் தேரர் வெளிப்படுத்தியவிதம் அருவருப்பானது; அச்சுறுத்தலானது. அது, இன்றைக்கு நேற்றைக்கு உருவான ஒன்றல்ல. இந்த நாட்டின் பெரும் பிரச்சினைகளுக்கு காரணமான பௌத்த பேரினவாத சிந்தாந்தத்தின் வழி வருவது.

பௌத்த பேரினவாதத்தை நிலைநிறுத்துவதற்காகவே, நாட்டின் அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக வரையறுக்க வேண்டிய அரசியலமைப்பு, ஒரு தரப்பினரை முதலிடத்திலும் மற்றைய தரப்பினரை இரண்டாம் இடத்தில் வைப்பதும், நீதி பற்றிய அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கும் செயல். அப்படியான நிலையில், பேரினவாதத்தின் வழி நடக்கிற மக்களுக்கு, இயற்கை நீதி பற்றிய அடிப்படைகளோ சித்தாந்தமோ இருக்க வேண்டியதில்லை. அவர்கள், அதன்பால் வளர்க்கப்படவும் வாய்ப்புக்கள் இல்லை. ஒரு கட்டத்துக்கு மேல் பௌத்த பேரினவாதம் என்பது, கேள்விகளுக்கு அப்பாலானது; சரியானது என்று அவர்கள் முழங்கத் தொடங்கிவிடுகிறார்கள். செம்மலை- நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் அத்துமீறி விகாரை கட்டுவதற்கு முடிவதும், கன்னியாவில் தனியாருக்குச் சொந்தமான காணியைப் பிடுங்கி, விகாரை கட்டுவதற்கு தொல்லியத் திணைக்களத்தால் வழங்க முடிவதும் அந்தத் சிந்தாந்தத்தின் வழி வருவதுதான்.

தொல்லியல் திணைக்களம் தொடங்கி இலங்கை அரச இயந்திரங்கள் அனைத்தும் பௌத்த பேரினவாதத்தை நிலைநாட்டுவதற்கான வேலைகளை செய்துகொண்டிருக்கின்றன. எப்போதாவது, இயற்கை நீதி காக்கப்பட்டாலும், அதன் மீதேறி நடப்பதற்கு அரச இயந்திரமோ, பேரினவாதத்தின் வேட்டை நாய்களோ தயங்குவதில்லை. ஏனெனில், அவர்களை காப்பாற்றுவதற்கும் கௌரவிப்பதற்கும் ஆட்சியாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனை ஒத்தூதுவதற்கும், சிறைச்சாலைகளில் சென்று நலம் விசாரிப்பதற்கும் தலைவர்கள் என்கிற போர்வையில் சிறுபான்மைத் தரப்பினரும் தயாராக இருக்கிறார்கள்.

ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழு, நீதிமன்றத் தீர்ப்பினை மீறிச் செயற்பட்டதை நீதிமன்ற நடைமுறைகள் ஊடாக தண்டிக்க வேண்டியதும், அதற்காக இயங்க வேண்டியதும் தமிழ்த் தலைவர்களினதும், சட்டத்தரணிகளினதும் கடமை. அதனை அவர்கள் எந்தவித விட்டுக்கொடுப்பும் இன்றி முன்னெடுக்க வேண்டும்.

ஆனால், மறைந்த தேரரின் உடலை கொழும்பில் இருந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை நோக்கிக் கொண்டுவந்ததன் பின்னால், முக்கியமான சில விடயங்களும் இருக்கின்றன. அது, “இது பௌத்த சிங்கள நாடு..” என்கிற மதவாத அடிப்படையை நிலைநிறுத்தும் எண்ணம் சார்ந்தது மாத்திரமல்ல. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சார்ந்ததுமாகும். விகாரை தொடர்பிலான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், அங்கு தேரரின் உடலை எரியூட்ட முனைந்தால், தமிழ் மக்கள் அதற்கு எதிராக திரள்வார்கள் என்பது, இலகுவான ஊகிப்பு. அதன்வழி, தமிழ் மக்களுக்கு எதிராக தென் இலங்கையில் பேரினவாதத்தை இன்னும் தூண்டிவிடலாம் என்பது, அதனை திட்டமிட்டு அரங்கேற்றிய ஞானசார குழுவின் எண்ணம். ஆனால், தமிழ் மக்கள் விடயத்தை நீதிமன்றத்தினூடாக கையாண்ட போது, அது அவர்களின் எண்ணத்தை குறிப்பிட்டளவில் தடுத்துவிட்டது. ஆனாலும், எப்படியாவது, நீதிமன்றத் தீர்ப்பின் மீதேறி நின்று தங்களின் வெட்டி வீரத்தை நிலைநாட்டி, தேர்தல் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இயங்கியிருக்கிறார்கள்.

ஞானசார தேரர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையானதை வரவேற்ற தரப்புக்களில் தமிழ் அடையாளத்தோடும் இந்து அடையாளத்தோடும் இருக்கிற சிலரும் உண்டு. ஆனால், அவர்கள், குறிப்பாக சிவசேனா அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன், பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோர், நீராவியடி ஆலயப் பிரச்சினை தொடர்பாக எந்தக் கருத்துக்களையும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் வெளியிட்டிருக்கவில்லை. ஞானசார குழுவின் அடாவடித்தனம் குறித்தும் பேசியிருக்கவில்லை. மாறாக, சிறுபான்மையினங்களுக்கு இடையில் ஞானசார தரப்பு முன்னெடுத்த பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஒத்தூதிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில், அவர்கள் தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பிவிடவும் துணிந்தார்கள். அதற்கு இந்த ஒத்தோடிகள் இணங்கிச் செயற்பட்டார்கள்.

தென் இலங்கையின் அரசியல் என்பது, சிறுபான்மை மக்களை இனங்களாக மாத்திரமல்ல, மதங்களாகவும், வர்க்கங்களாகவும், வாக்குகளாகவும் பிரிப்பதில் கவனம் செலுத்துவது. அதன்போக்கிலும், இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் வெற்றியில் தமிழ் மக்களின் வாக்கு தீர்மானிக்கும் கட்டத்தை எட்டியிருக்கிற நிலையில், அதற்கு எதிராக பௌத்த சிங்களப் பேரினவாதத்தைத் தூண்டி, அதன்பால், சிங்கள வாக்குகளை ஒற்றைத்தரப்பை நோக்கித் தள்ளுவது ஒன்றும் புதிய விடயம் அல்ல. அது, 2010 ஜனாதிபதித் தேர்தலில் போர் வெற்றிவாதம் எடுத்துக் கொண்ட நிலையை ஒத்தது.

மேற்கூறப்பட்ட விடயங்கள் தமிழ் மக்களுக்கு புரியாதவை அல்ல. ஆனால், உணர்ச்சிவசப்படுகின்ற நிலையில், தடுமாறும் சந்தர்ப்பமும் ஆற்றாமைச் சூழலும் அலைக்கழிக்கும். அது, பிழையான பக்கங்களை நோக்கித் தள்ளிவிடும். அப்போதுதான், மிகவும் நிதானமாகவும் நடைமுறைகள் வழியும் பயணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களின் தூண்டல்களுக்கு துலங்குவதால் என்றைக்குமே வெற்றி வந்து சேராது. அது, தோல்வியின் பக்கமே தள்ளும்.

இறுதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இந்தப் பத்தியாளர் சொல்லிக் கொள்வது,

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் அங்கம் வகித்த தாங்கள் இருவரும், அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கும் விடயத்துக்கு எதிராக வாதங்களை முறையாக வைத்திருக்கவில்லை என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் குற்றச்சாட்டு. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரையிலும், தற்போதுள்ள அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு என்ன இடம் வழங்கப்பட்டிருக்கிறதோ, அதுவே மீள உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அப்படியான நிலையில், தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு என்கிற ஒன்றைப் பற்றி உண்மையாக உரைக்கும் தார்மீகத்தை தாங்கள் கொண்டிருக்கிறீர்களா என்பது தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும்.

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் சூழல் தற்போது இல்லை. ஆனாலும், ஜனாதிபதி வேட்பாளர்களுடனான அல்லது கூட்டணிகளுடனான தங்களின் கலந்துரையாடல்களில் புதிய அரசியலைப்பு தொடர்பிலான விடயத்தை முக்கிய பேசு பொருளாக நீங்கள் முன்வைக்கிறீர்கள். அப்படியான தருணத்திலாவது, ஒரு தரப்பை மாத்திரம், மேன்மைப்படுத்தும் விடயங்களைப் புறந்தள்ளி, அனைவரையும் சமமாக மதிக்கும் அரசியலமைப்புப் பற்றி பேசுவீர்களா?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒழிப்பு முறைக்காக தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டும், அதற்காக சமூக ஊடகங்களில் ஆதங்கப்பட்டுக் கொண்டுமிருக்கிற தாங்கள், இனியாவது தமிழ் மக்களின் சாதாரண குரல்களில், பௌத்தத்துக்கு முதலிடம் என்ற விடயத்துக்கு எதிரான குரலையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், அதுதான் இந்த நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான வேர். அந்த வேரை வெட்டாமல், எதுவுமே செய்ய முடியாது. அது, கன்னியா வழக்கில், தொல்லியல் திணைக்களத்தையும், சட்டமா அதிபர் திணைக்களத்தையும் மகாவம்சத்தில் இந்த இடத்தில் பௌத்த விகாரை இருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது என்ற ‘கதைகளை’ ஆதாரங்களாக சொல்ல வைக்கும். அதனை நீங்களும் எதிர்கொள்ள வேண்டி வரலாம்!

(புருஜோத்தமன் தங்கமயில்)

-4tamilmedia.com

TAGS: