இலங்கையில் தற்போது பௌத்த தேரர்களின் ஆட்சியே நடப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற சம்பவமே சாட்சியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நீராவியடியில் இடம்பெற்ற சம்பவத்தைப் பார்க்கும்போது, நீதி செத்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.
கடந்த 10 வருடங்களாக மக்கள் போராடியது, காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
ஆனால், இந்த நாட்டில் தற்போது நீதி அழிந்துவிட்டது. எனவே நீராவியடியில் முரண்பாடு தோற்றுவித்த மதகுருமார் மற்றும் பொலிஸாருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அதுவரையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல்வாதிகள் எவரும் தமிழர் பகுதிகளுக்கு வர வேண்டாம் என மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.
-tamilcnn.lk