மதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

மதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்…

நீராவியடி விடயம் பௌத்தத்திற்கும் அவமானம்…

(பாராளுமன்ற உறுப்பினர் – சீ.யோகேஸ்வரன்)

இந்து மதத்தின் புனிதத்தைக் கெடுக்கும் விதமாக நீராவியடியில் இடம்பெற்ற விடயம் கண்டிப்புக்குரியதோடு அது இந்து மதத்தை மட்டுமல்ல பௌத்த சமயத்தினையும் அவமானப்படுத்தும் செயலுமாகும். ஏனெனில் இந்து மதத்தில் இருந்து தோன்றியதே பௌத்தமதம். நீதிமன்ற உத்தரவை மீறி இச்செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மதச்சாயம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த துறவி ஒருவரின் உடலம் நீதிமன்ற உத்தரவையும் மீறி தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் அவரால் வெளிப்படுத்தப்பட்ட கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நல்லாட்சி அரசில் நீதித்துறை ஓரளவு சுயாதீனமாக இயங்கிக் கொண்டு வரும் சமயத்தில் மதத்தின் பெயரால் நீதித்துறையை அலட்சியம் செய்யும் போக்கு பௌத்தமதத் துறவிகளால் அண்மைக்காலமாக அரங்கேறிக்கொண்டு வருகின்றது. இதற்கு முல்லைத்தீவு நீராவியடியும் விதிவிலக்கல்ல.

பௌத்தத்தின் ஆரம்பமே இந்து மதம் தான் அவ்வாறிருக்கையில் இந்து மதத்தின் புனிதத்தைக் கெடுக்கும் விதமாக முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய குளத்திற்கருகாமையில் பௌத்தமதகுருவின் உடலத்தினைத் தகனம் செய்தமை கண்டிப்புக்குரிய விடயம் என்பதோடு இது பௌத்த சமயத்தினையும் அவமானப்படுத்தும் செயலுமாகும்.

இந்த நாட்டில் சட்டங்கள் அனைவருக்கும் ஒன்று என்று பேசப்பட்டாலும் பௌத்த மதத் துறவிகளுக்கு வேறாகவே இருக்கின்றது. காவியுடை தரித்தால் எதுவும் செய்யலாம் என்ற நிலைமை தற்போது உருவாகிக் கொண்டு வருகின்றது. இதனை அரசாங்கமும் கட்டுப்படுத்தவதில்லை. நடந்துள்ள விடயம் தவறாக இருந்தாலும் பேரினவாதத் தலைவர்கள் எவரும் கண்டு கொள்வதும் இல்லை.

நீராவியடியில் இடம்பெற்ற விடயமானது சட்டத்துறைக்கு கலங்கம் ஏற்படுத்துவதோடு, சட்டதரணிகளுக்கும் பாதுகாப்பற்ற தன்மையையே சுட்டி நிற்கின்றது. ஒரு மதத்தின் உரிமை மற்றைய மதத்தின் புனிதத்தைக் கெடுப்பதாக இருக்கக் கூடாது. ஆனால் இந்த நாட்டில் பௌத்த சமயம் என்ற பெயரில் ஏனைய மதங்கள் முடக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் தொடர்கதையாகவே இருக்கின்றது. இவை முற்றாக நிறுத்தப்பட வேண்டும். மதத்தின் பெயரால் இடம்பெறம் சட்டரீதியற்ற செயற்பாட்டை சட்டம் இரும்புக் கரம் கொண்டு பாரபட்டசமின்றி அடக்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவினையும் மதிக்காமல் இவ்விடயம் இடம்பெற்றிருக்கின்றது. காலங்கள் மாறினாலும் பொளத்த பிக்குகளின் மனங்களில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு சில பிக்குகளின் இவ்வாறான நடவடிக்கை அனைவருக்கும் இழுக்காக அமைகின்றது. இதற்கு முன்னரும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலே சிறைதண்டனை அனுபவித்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற்ற ஞானசார தேரரும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவராகக் காணப்படுகின்றார். அவர் மீண்டும் அவ்வாறானதொரு குற்றத்தையே செய்துள்ளார். அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதியும் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தினை பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் தலைவர் என்ற ரீதியிலும் நான் வன்மையாகக் கண்டிப்பதோடு. இவ்வாறான செயலில் ஈடுபட்டவர்களை மதச் சாயம் பூசி விட்டு விடாமல் சட்டத்தின் முன் நிறத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

-tamilcnn.lk

TAGS: