பொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழ்க் கூட்டமைப்பு தாக்கல்! – உயர்நீதிமன்றில் சுமந்திரன் ஊடாக சாந்தி நடவடிக்கை

முல்லைத்தீவு, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் பௌத்த பிக்குவின் உடலைத் தகனம் செய்ய வேண்டாம் என்று மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டபோதும் பொலிஸாரின் பாதுகாப்புடன் நீதிமன்றக் கட்டளையை மீறி ஆலயத் தீர்த்தக் குளத்தின் அருகே பிக்குவின் உடல் எரியூட்டப்பட்டபோது, நீதிமன்றின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத பொலிஸார் மீதும் இரு பிக்குகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளார்.

பௌத்த பிக்குவின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயச் சூழலில் எரியூட்ட எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் கடந்த 23ஆம் திகதி, ஆலய வளாகத்துக்குள் பௌத்த பிக்குவின் உடலை எரியூட்டத் தடைவிதித்தது. அத்துடன் மன்றின் கட்டளையை நடைமுறைப்படுத்துமாறு முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரைப் பணித்திருந்தது.

இருப்பினும் நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டு பௌத்த பிக்குவின் உடல் ஆலய வளாகத்துக்குள் எரியூட்டப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறிய பிக்குகள் இருவர் மற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் நாளைமறுதினம் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று தெரியவருகின்றது.

-tamilcnn.lk

TAGS: