பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டு இன்றுடன் (அக்டோபர் 2) ஓராண்டாகிறது.
தனி மனிதர்கள் சிலரின் மரணங்கள் சர்வதேச அளவில் தலைப்பு செய்தி ஆகி இருக்கின்றன, வரலாற்றில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கின்றன, நாடுகள் இடையேயான உறவுகளை மாற்றி அமைத்திருக்கின்றன. கஷோக்ஜி மரணமும் அப்படியான மரணம்தான்.
கடந்தாண்டு இதே நாளில்தான் ஜமால் இஸ்தான்புலில் உள்ள செளதி தூதரகத்தில் கொல்லப்பட்டார்.
யார் இந்த கஷோக்ஜி?
செளதி அரேபியாவை சேர்ந்த பிரபலமான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி.
இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவில் 1958 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமால். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.
வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை ஒரு பத்திரிகையாளராக கஷோக்ஜி பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களை, போர்களை, பிரச்சனைகளை.
சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியது முதல் அல் கய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் எழுச்சி வரை பல சம்பவங்களை பதிவு செய்தவர் கஷோக்ஜி.
1980 – 90 ஆகிய காலகட்டங்களில் பல முறை இவர் ஒசாமாவை நேர்காணல் கண்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் ஜிகாதிகளின் சர்வதேச தலைவராக இருந்த அப்துல்லா அஜ்ஜாமை காப்பாற்றியவர் ஜமால் கஷோக்ஜி. ஒசாமா பின் லேடனின் நெருங்கிய நண்பராக இருந்தவர் ஜமால் கஷோக்ஜி என்றும் கடந்தாண்டு முணுமுணுக்கப்பட்டது.
கத்தார் அரசின் ஆதரவில் இயங்கும் ‘அல் ஜசீரா’வுக்கு எதிராக செளதி ஆதரவில் அல் அரப் தொலைக்காட்சி 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது அதன் தலைமை பொறுப்பை இவர் ஏற்றார்.
ஆனால், 2015 ஆம் ஆண்டு பஹ்ரைனில் ஒளிபரப்பை தொடங்கிய 24 மணி நேரத்திலேயே தன் ஒளிபரப்பை நிறுத்தியது அந்த தொலைக்காட்சி. அதற்கு பஹ்ரைனின் எதிர்க்கட்சி தலைவரை பேச அழைத்ததுதான் காரணம்.
செளதியின் விவகாரங்கள் குறித்து காத்திரமாக எழுதும் செய்தியாளராக பார்க்கப்பட்டார் ஜமால்.
ஒரு பத்திரிகையாளராக மட்டும் கசோக்ஜி இல்லை. பல தசாப்தங்களாக செளதி அரச குடும்பத்திற்கு நெருக்கமானவராக ஜமால் கஷோக்ஜி இருந்திருக்கிறார். அவர்களின் ஆலோசகராகவும் செயலாற்றி இருக்கிறார்.
2017ஆம் ஆண்டு செளதி அரச குடும்பத்துக்கும் கஷோக்ஜிக்கும் முரண்பாடு ஏற்பட்டது.
அவர் செளதியை கடுமையாக விமர்சித்தார். அதன் முடி இளவரசரை ரஷ்ய அதிபர் புதினுடன் ஒப்பிட்டர்.
அதற்கு பின்பு அங்கிருந்து அமெரிக்கா சென்றார்.
இளவரசர் முகம்மதை விமர்சித்து வாஷிங்டன் போஸ்ட் இதழில் கஷோக்ஜி தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.
வாஷிங்டன் போஸ்டில் தாம் எழுதிய முதல் கட்டுரையில், செளதியில் இருந்தால் தாம் கைது செய்யப்படலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
- ஜமால் கசோஜி: காணாமல் போன பின்லேடனை பேட்டி எடுத்த பத்திரிகையாளர்
- ஒசாமா பின் லேடனின் குரு அப்துல்லா அஜ்ஜாமின் வரலாறு என்ன?
செளதி தூதரகத்திற்கு செல்ல காரணம் என்ன?
துருக்கியை சேர்ந்த ஹெடிஸ் செஞ்சிஸ் என்ற பெண்ணை திருமணம் செய்ய ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டிருந்தார். அதற்கு கஷோக்ஜியின் முதல் திருமணத்தின் மணமுறிவு சான்றிதழ் அவசியம்.
இதனை பெறவே இஸ்தான்புலில் உள்ள செளதி அரேபியா தூதரகத்திற்கு சென்றார் ஜமால்.
முதலில் செப்டம்பர் 28ஆம் தேதி சென்ற அவரை அக்டோபர் 2ஆம் தேதி வந்து சான்றிதழை பெற்றுகொள்ள வலியுறுத்தினர் அதிகாரிகள்.
அக்டோபர் 2ஆம் தேதி சென்ற அவர் அதன்பின் மீண்டும் வீடு திரும்பவே இல்லை.
செளதி தூதுரகம் செல்லும் போது இரண்டு தொலைபேசிகளை ஹெடிஸ் செஞ்சிஸிடம் கொடுத்து, ஒரு வேளை நான் திரும்பவரவில்லை என்றால் துருக்கி அதிபர் எர்துவானின் ஆலோசகருக்கு அழைக்க சொல்லி இருக்கிறார்.
ஏறத்தாழ 10 மணி நேரம் தூதரக வாசலிலேயே காத்திருந்திருக்கிறார் ஹெடிஸ் செஞ்சிஸ்.
துருக்கி கூறியதென்ன?
பத்திரிகையாளர் கஷோக்ஜி காணாமல் போனதாக தகவல்கள் வெளியான உடனே துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் செளதியை குற்றஞ்சாட்டினார்.
கஷோக்ஜி கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு பதினைந்து செளதி உளவாளிகள் இஸ்தான்புல்லுக்கு வந்ததாகவும், அவர்கள் தூதரகத்திற்கு வெளியே இருந்த கேமராக்களை அப்புறப்படுத்தியதாகவும் துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜமால் கசோஜி “சௌதி தூதரகத்தில் கொல்லப்பட்டதற்கு துருக்கியிடம் ஆதாரம் உள்ளது”
- ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது எவ்வாறு? – மர்மம் விலகுமா?
- கஷோக்ஜி கொலை திட்டமிடப்பட்டது என்கிறார் துருக்கி அதிபர் – இதுவரை நடந்தது என்ன?
தூதரகத்திற்கு சென்ற சில நிமிடங்களிலேயே கஷோக்ஜி மூச்சு திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார். அவரது உடல் அழிக்கப்பட்டு இருக்கிறதென விசாரணை அதிகாரி இர்ஃபான் கடந்தாண்டு அக்டோபர் 31ஆம் தேதி கூறினார்.
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என ஆளுங்கட்சியின் எம் பிக்களிடம் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் கூறினார். இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் அக்டோபர் 2ஆம் தேதியன்று, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கான “வலுவான” ஆதாரங்கள் இருப்பதாவும் அவர் தெரிவித்து இருந்தார்.
கஷோக்ஜியின் உடல் எங்கே? அவரை கொலை செய்ய யார் உத்தரவிட்டது? போன்ற கேள்விகளுக்கு சௌதி அரேபியா பதிலளிக்க வேண்டும் என்றும் அதிபர் எர்துவான் வலியுறுத்தி இருந்தார்.
செளதி கூறுவதென்ன?
முதல் இரண்டு வாரங்களுக்கு செளதி தொடர்ந்து தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது.
அந்த சமயத்தில் ப்ளூம்பெர்க் ஊடகத்திடம் செளதி முடி இளவரசர் முகம்மது பின் சல்மான், கஷோக்ஜி சில மணிதுளிகளிலேயே தூதரகத்தைவிட்டு வெளியேறியதாக கூறி இருந்தார்.
எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை என்றும் கூறி இருந்தார்.
ஆனால், இரண்டு வாரங்களுக்கு பின் செளதியின் நிலைப்பாடு மாறியது. முதற்கட்ட விசாரணையில் செளதி அதிகாரிகளுடன் நடந்த சண்டையில் அவர் இறந்ததாக கூறியது.
2018ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி செளதி விசாரணை அதிகாரி ஷலான் பின் ராஜிஹ் அளித்த பேட்டியில், கஷோக்ஜியை மீண்டும் செளதிக்கு அழைத்து வரும் முயற்சியில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றார்.
- பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தலையிடுகிறது அமெரிக்கா – செளதி கண்டனம்
- ஜமால் கஷோக்ஜி கொலையை யார் செய்தது? இன்னும் முடிவுக்கு வராத அமெரிக்கா
அளவுக்கு அதிகமான மயக்க மருத்து கஷோக்ஜிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே அவர் மரணித்து இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
ஆனால், இந்த கொலை குறித்து முடி இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி இருந்தார்.
கடந்தாண்டு ரியாதில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விசாரணை அதிகாரி ஷலான் பின் ராஜிஹ், “கஷோக்ஜி மரணம் தொடர்பாக 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனை வழங்குவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.” என்றார்.
இப்படியான சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பேட்டி ஒன்றில் சல்மான், “சௌதி அரேபியாவின் தலைவராக இந்த விவாகரத்தில் நான் முழுப்பொறுப்பேற்கிறேன். குறிப்பாக சௌதி அரசுக்காக வேலைபார்க்கும் சில தனி நபர்கள் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் பொறுபேற்கிறேன்” என்றார்.
ஆனால் கஷோக்ஜியை கொலை செய்ய உத்தரவிட்டதாகவோ அல்லது கஷோக்ஜி கொலை செய்யப்படுவது குறித்து ஏற்கனவே தனக்கு தெரியும் என கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் தெரிவித்தார்.
கஷோக்ஜி கொலை தொடர்பாக 11 பேரை ரியாத் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
மூடப்பட்ட அறைகளில் ரகசியமாக இந்த விசாரணை நடப்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை.
ஐ.நா கூறியதென்ன?
ஐ.நா மன்றம் ஆக்னஸ் தலைமையிலான சிறப்பு குழுவை கொண்டு கஷோக்ஜி கொலை தொடர்பாக விசாரித்தது.
ஆக்னஸ் அளித்த அறிக்கையில் செளதி அரேபியாதான் கஷோக்ஜி கொலைக்கு காரணமென குற்றஞ்சாட்டி இருந்தார். மேலும், இந்த கொலை தொடர்பாக முகம்மது பின் சல்மானையும், செளதி உயர் அதிகாரிகளையும் விசாரிப்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இம்மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நேரும் என்று அச்சப்படுவதாகவும், மேலும் இது “வழக்கமான ஒன்றாக மாறிவிடும்” என்று அஞ்சுவதாகவும் ஐ.நா பொது செயலர் அண்டான்யு குட்டாரிஷ் பிபிசியிடம் அந்த சமயத்தில் தெரிவித்திருந்தார்.
“இம்மாதிரியான சம்பவங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் சர்வதேச நாடுகள் இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
உலக நாடுகள் கூறியதென்ன?
கஷோக்ஜி கொலையை செளதி அரேபியாவுடன் இணக்கமாக இருந்த உலக நாடுகளே கண்டித்தன.
ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு செளதி பட்டத்து இளவரசரை குறைகூறி அமெரிக்க செனட் தீர்மானமே நிறைவேற்றியது.
ஆனால், எந்த நாடும் அதற்கு மேல் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது செளதிக்கும் பிற நாடுகளுக்கும் இருக்கும் வணிக தொடர்பு.
- செளதி அரேபியா – அமெரிக்கா முரண்: எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?
- மாயமான பத்திரிகையாளர் எங்கே? சௌதியிடம் கேட்கும் பிரிட்டன்
- கஷோக்ஜி கொலை: ஆடியோ பதிவுகளை அமெரிக்காவிடம் வழங்கியது துருக்கி
அமெரிக்காவுடன் 110 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தை செளதி கையொப்பமிட்டு இருந்தது. பத்து ஆண்டுகளில் 350 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இது உயரும் என்றும் கணிக்கப்பட்டது.
செளதிக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் பிற நாடுகள் பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் ஜெர்மனி.
டிரம்பின் ஆலோசகரும், மருமகனுமான ஜரேத் குஷ்னர், செளதி பட்டத்து இளவரசருடன் தொடர்ந்து நெருக்கமான உறவு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. -BBC_Tamil