தமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான் ;விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வேளையில் இறங்கி வந்து பேச்சுவார்த்தைக்கு சென்றார்கள்

பேரினவாத சக்திகள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்தி சிதைக்க எத்தனிப்பதை நாங்கள் கண்கூடாக காண்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை பகுதியில் மகளீர் சங்க கட்டட திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வேளையில் ஏன் இறங்கி வந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு சென்றார்கள் என்றால் எங்களது தமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான். நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ச , மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க ஆகியோரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் தீர்வுத்திட்டம் ,சுய நிர்ணய உரிமை ,மாகாண சபைகளுக்கான உச்ச பட்ச அதிகாரம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு பட்ட கட்சிகளிடம் முன்னிறுத்தி பேசி வருகின்றோம்.

தமிழர்களின் தீர்வு திட்டம் தொடர்பாக பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை ஐக்கிய தேசிய முன்னணியினரிடம் முன்னெடுத்து வருகின்றோம் . அந்த பேச்சுவார்த்தை தொடர்பாக தொடர்ந்தும் தமிழ் மக்கள் சார்பாக முன் நகர்த்த வேண்டிய கடமைப்பாடு தமிழ்தேசிய கூட்டமைப்பாகிய எங்களுக்கு இருக்கின்றது.

தமிழ் தேசியத்திற்கு எதிராக பலர் எம்மை விமர்சிக்கின்றனர். அவர்களுக்கான தக்க பதிலளிக்க வேண்டிய கடமைப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்த உங்களுக்கே இருக்கின்றது.

எங்களது தமிழ்த்தேசியத்தின் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கடந்த காலங்களிலும் பலப்படுத்தியுள்ளீர்கள். எதிர்காலத்திலும் பலப்படுத்த வேண்டிய கடமைப்பாடு தமிழ் மக்களாகிய உங்களுக்கு உள்ளது.

-https://tamilcnn.lk

TAGS: