சாலே: பிகேஆர் பல்லினக் கட்சி என்பதால்தான் அதில் சேர விண்ணப்பித்தேன்

சாபாவின் முன்னாள் முதலமைச்சரும் கூட்டரசின் தொடர்பு, பல்லூடக அமைச்சருமான சாலே சைட் கெருவாக் பிகேஆர் ஒரு பல்லினக் கட்சியாகவும் தன் அரசியல் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் கட்சியாகவும் இருப்பதால்தான் அதில் சேர விரும்பியதாகக் கூறினார்.

அக்கட்சியின் பல்லின அமைப்பும் முற்போக்கு அரசியலும்தான் மலேசியாவைத் தீவிரவாதத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்றாரவர்.

“நான் பிகேஆரில் சேர்ந்து விட்டதாக பல இணையத் தளங்களில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதை அறிவேன்”, என்று சாலே இன்று ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டார்.

ஆனால் அது தவறு சேர்வதற்கு இணையம்வழி விண்ணப்பம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது என்பதை சாலே தெளிவுபடுத்தினார்.

இதனிடையே, சாலே சைட்டிடமிருந்து விண்ணப்பப் படிவம் வந்துள்ளதை பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குனர் ஃபாஹ்மி ஃபாட்சில் உறுதிப்படுத்தினார்.

பிகேஆர் அரசியல் பிரிவு அதன் அடுத்த கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கும் என்றாரவர்.