’ஒற்றுமையே தமிழர்களுக்கு எஞ்சியுள்ள இறுதி அஸ்திரம்’

“கட்சி அரசியலுக்காக பேரினவாதிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்காமல் தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி ஒன்றுமையாக ஓரணியில் நின்று ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும்”,என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுடன் இன்று (06) காலை கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டபின்னர் ‘ஒற்றுமை’என்ற ஆயுதமே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கின்ற இறுதி அஸ்திரமாகும். எனவே, அந்த ஒற்றுமையை சிதைத்து, தமிழர்களை கூறுபோடுவதற்காக பேரினவாதிகள் பலவழிகளிலும் பொறிகளை வைத்துவருகின்றனர்.

இந்த கபடநோக்கத்தை – சூழ்ச்சித் திட்டத்தை அறியாமல், வடக்கு, கிழக்கிலுள்ள அரசியல் தலைவரகள், கொள்கைகளுக்கு அப்பால் கட்சி அரசியலை முன்னிலைப்படுத்துவதால் பேரினவாதிகளின் திட்டம் வெற்றிகரமாக அரங்கேறிவருகின்றது.

இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அந்த தேர்தலை எவ்வாறு தமிழ் மக்களுக்கு சார்பானதாக அதேபோல் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர்களை வெற்றிபெற வைப்பதற்கான களமாக பயன்படுத்துவது என்பதே தொடர்பிலேயே தமிழ்க் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

மாறாக இறுக்கமான நிலைப்பாட்டை கடைபிடித்து, எழுத்துமூல உத்தரவாதம் வேண்டும் என்றெல்லாம் அடம்பிடித்து கட்சி அரசியலை மட்டுமே முன்னிலைப்படுத்தினால் மஹிந்த தலைமையிலான பேரினவாதிகளின் வேட்பாளருக்கான வெற்றிக்கே தெற்கில் அது வழிசமைத்துக்கொடுக்கும்.

அதேவேளை, கடந்தகாலத்தில் தமிழ்க் கட்சிகளுக்கிடையே நடைபெற்ற சில கசப்பான சம்பவங்களை பற்றி மட்டுமே நிகழ்காலத்தில் பேசி எதிர்காலத்தை தொலைக்கபோகின்றோமா, அல்லது மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி கொள்கைரீதியில் சில விட்டுக்கொடுப்புகளை செய்து மக்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இணைந்து செயற்படபோகின்றோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் இது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம் மக்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அவர்கள் அடக்கி ஆளப்பட்டபோது சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தி பதவி பட்டங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றாக சங்கமித்தனர்.

இங்கு கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் குறித்து சிந்திக்கப்பட்டது. மலையகத்திலுள்ள கட்சிகளும் புரிந்துணர்வு அடிப்படையில் செயற்பட்டுவருகின்றன.

எனவே, முக்கியமான இந்தகாலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் நலனைகருத்தி, விட்டுக்கொடுப்புகள் சகிதம் இணைந்துசெயற்பட வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையினை மீண்டும் விடுக்கின்றேன்” என்றார்.

-tamilmirror.lk

TAGS: