இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 13,784 பேர் முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
கொழும்பு – ஷங்கிரில்லா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
யுத்தம் நிறைவடைந்த சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து ராணுவத்திடம் 13,784 பேர் சரணடைந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு, விடுதலைப்புலிகள் காணப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் 6 மாதங்கள், ஒரு வருடம் அல்லது 2 வருடம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தம் இடம்பெற்ற எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான புனர்வாழ்வு திட்டமொன்று முன்னெடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் மிக வெற்றிகரமாக அந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.
அவ்வாறாயினும், ராணுவத்திடம் சரணடைந்த எவரும் காணாமல் ஆக்கப்படவில்லையா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ஸ, சரணடைதல் என்பது வேறு, காணாமல் போகின்றமை என்பது வேறு என கூறினார்.
யுத்தம் இடம்பெற்ற போது ராணுவத்தில் கடமையாற்றிய உயர்நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் என சுமார் 4000 திற்கும் அதிகமானோர் இன்றும் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
யுத்தக் காலத்தில் பலர் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைவடைந்து உயிரிழந்ததாகவும், அவ்வாறு உயிரிழந்தவர்களை உறவினர்கள் அடையாளம் காணாமையினால், இன்றும் அவர்கள் காணாமல் போன பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யுத்தம் இடம்பெறுகின்ற காலப் பகுதியில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவினர்கள் மீள திரும்பவில்லை என வடக்கிலுள்ள குடும்பங்கள் கூறுகின்றன. அவ்வாறாயின், அந்த குடும்பத்தினர் பொய் கூறுகின்றார்களா? என இதன்போது கோட்டாபய ராஜபக்ஷவிடம் வினவப்பட்டது.
”ஆம், சிலர் அவ்வாறு கூறுகின்றனர். அது ஒரு குற்றச்சாட்டாகும். இந்த விடயம் தொடர்பில் நாம் விசாரணைகளை நடத்தினோம். ஆணைக்குழுக்களை நியமித்தோம். ஆனால் குறிப்பிட்ட நபர்கள், குறிப்பிட்ட தேதிகளில், குறிப்பிட்ட இடத்தில் காணாமல் போயுள்ளதாக யாரும் கூறவில்லை.” என கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.
பரணகம ஆணைக்குழு காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை வெளியிட்டதை, ஊடகவியலாளர்கள் இதன்போது கோட்டாபய ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டினர்.
அவ்வாறு கிடையாது என கோட்டாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் மீண்டும் பதிலளிக்க, ஊடகவியலாளர்கள் பரணகம அறிக்கையில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டதாக கூறினார்கள்.
- கடலில் திசை மாறி 20 நாள்கள் தத்தளித்த இலங்கை மீனவர்கள்: பசி தீர்த்த ஆமை ரத்தம்
- மீண்டும் இணைந்த மஹிந்த, மைத்திரி தரப்பு – உடன்படிக்கை கையெழுத்து
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆண்டறிக்கை விபரங்கள்
யுத்தம் மற்றும் யுத்தத்திற்கு முன்னதாக காலப் பகுதியில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில், காணாமல் போனோர் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளளன.
இந்த ஆண்டறிக்கையின் பிரகாரம், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி வரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் 14,641 ஆவணங்கள், காணாமல் போனோர் தொடர்பில் தமக்கு கிடைத்துள்ளதாக அந்த அலுவலகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,
இந்த ஆவணங்களை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் பதில்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புப்பட்டவர்களோ அல்லது ராணுவத்தில் கடமையாற்றியவர்களையோ தேடித் தருமாறு கோரி தாம் போராட்டங்களை நடத்தவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா பி.பி.சி தமிழிடம் தெரிவித்தார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து கையளிக்கப்பட்ட, யுத்தத்துடன் தொடர்புப்படாத தமது உறவுகளை ஒப்படைக்குமாறே தாம் கோரி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமது உறவினர்களை தாம் ராணுவத்திடம் ஒப்படைத்தமை உண்மை எனவும், ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ இன்று உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுகின்றார். -BBC_Tamil