கேலிச் சித்தரங்கள் மூலம் இனவாதத்தை எதிர்க்க ஒரு நூல், ஜுனார் வெளியிடுகிறார்

இனவாதம் சிந்தனையைத் தரம் தாழ்த்துகிறது, நாட்டு நிர்மாணிப்புக்கு அது ஒரு பெருந் தடங்கல் என்று உரக்க உரைக்கிறார் கேலிச்சித்திர ஓவியர் சுல்கிப்ளி எஸ்எம் அன்வார்.

ஜுனார் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அவர், தன் கருத்தைப் பறைசாற்ற “Cartoons against racism”( இனவாத  எதிர்ப்புக்  கேலிச் சித்திரங்கள்) என்ற நூலை வெளியிடுகிறார்.

நூல் வெளியீடு பற்றி அறிவித்த ஜூனார், பகாசா மலேசியாவிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் அந்நூல் 48 சித்திரங்களைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

“ இந்நூல் வெளிவரும் நேரம் ஒருசில தரப்பினரும் அரசியல் கட்சிகளும் இனவாதம் என்ற தீயைக் கிண்டிக் கிளறிவிட்டு அது கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நேரம். அரசாங்கத் தலைவர்கள் அதைத் தடுப்பதற்கு எதுவும் செய்யாமலிருப்பதுதான் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. அந்த எதிர்மறை அரசியலை ஊக்கப்படுத்துவோரும் இருக்கவே செய்கிறார்கள்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

இனவாதத்தை ஒழிப்பதில் அரசாங்கம், பொதுமக்கள் இரு சாராருக்கும் பொறுப்புண்டு என்று கூறிய ஜுனார் தன் பங்குக்கு அதற்கு எதிராகக் கேலிச் சித்திரங்களை வரைந்து கொண்டிருப்பதாக சொன்னார்..

ஜூனார் நூலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மணி 12-க்கு பங்சார் வில்லேஜ் 1-இல் அபோர்ன் ஸ்டோரில் நடைபெறும். ஜுனார் வலைத்தளத்திலும் அது கிடைக்கும்.