இராகவன் கருப்பையா – “தமிழ் மொழிக்காக நான் எதையும் செய்யத் தயார். என் உயிர், மூச்சு, நாடி, நரம்பு எல்லாமே தமிழுக்காகத்தான்,” என ‘வெறித்தனமாக’ தமிழ் மொழி மீது ‘காதல்’ கொண்டுள்ள நிறைய பேர்கள் உள்ளனர்.
“என் உடலின் எந்த பாகத்தை கீறிப் பார்த்தாலும், சொட்டும் குருதி கூட தமிழைத்தான் வெளிக் கொணரும்,” என உணர்ச்சி பொங்க பறைசாற்றும் மொழி ஆர்வலர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களில் எத்தனை பேர்கள் ஆத்மார்த்தமாக தமிழ் மொழி மீது பற்று கொண்டு அதற்கு ஏற்றவாறு தங்களுடைய வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்து வாழ்கின்றனர் என்பது அகநிலைக்குரிய ஒரு கேள்விதான்.
“தமிழ் பள்ளியே தமது தேர்வு, நம் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புவோம், தமிழை வாழ வைப்போம்,” போன்ற விர வசனங்களை மேடைகளில் முழங்கிவிட்டு, வீடு திரும்பியவுடன் அதற்கு எதிர்மறையாக செயல்படுபவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர்.
அவர்களில் ஒரு சாராரின் இல்லங்களில் தமிழ் மொழிக்கு இடமில்லை எனும் நிலை மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயமாகும்.
ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் இவர்கள், வீட்டில் தமிழ் மொழிக்குக் கிஞ்சிற்றும் முக்கியத்துவம் கொடுக்காதது வியக்கத்தக்க ஒன்றுதான்.
இத்தகைய அவலம் நம் சமூகத்தினரிடையே தற்போது துரிதமாக வளர்ந்துவரும் ஒரு காவண்ணமாக(ஃபேஷன்) உள்ளது என்றால் அது மிகையில்லை. இந்த நவீனக் கலாச்சாரத்தை ‘மொழிக் கொலை’ என்று கூட சொல்லலாம்.
‘ஐ காண்ட் ஸ்பீக் மெலெ,'(எனக்கு மலாய் பேசத் தெரியாது) என்று எந்த ஒரு மலாய்க்காரரும் பெருமையாக அறிவித்தது கிடையாது. மலாய் மொழி தேசிய மொழி என்பது ஒருபுறமிருக்க, தங்களுடைய இல்லங்களிலோ வெளியிலோ அவர்களுக்கு அதுதான் தொடர்பு மொழியாக உள்ளது. எந்த அளவுக்கு அவர்கள் உயர் கல்வி பெற்றிருந்தாலும் இந்நிலையில் மாற்றமிருக்காது.
அதே போல, ‘ஐ காண்ட் ஸ்பீக் மெண்டரின்,'(எனக்கு மெண்டரின் மொழியில் பேசத் தெரியாது) என சீன சமூகத்தைச் சார்ந்த ஒரு சராசரி நபர் சொல்வதில்லை.
ஆனால், ‘ஐ காண்ட் ஸ்பீக் டெமல்,'(எனக்கு தமிழ் பேசத் தெரியாது), ‘ஐ டோண்ட்னோ டெமல்,'(எனக்குத் தமிழ் தெரியாது), என பெருமையாக விளம்பரப்படுத்திக் கொள்வோர் நம்மில் நிறைய பேர்கள் உள்ளனர்.
அடையாளத்தை இழந்த இவர்கள் தங்களுடைய தலைமுறையோடு தமிழ் மொழிக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயமாகும்.
இதற்கிடையே தமிழ் மொழிக்குக் கடுகளவும் இழுக்கு ஏற்படாமல், அதனைப் போற்றி புகழ்ந்து உயிரென மதித்து வளர்ப்பவர்களும் நம்மிடையே இருக்கவேச் செய்கின்றனர்.
வாசகர் வட்டம், எதிலும் தமிழ், இலக்கியத் தேடல், எங்கும் தமிழ், போன்ற எண்ணற்ற புலனக் குழுக்களின் வாயிலாக அதிக சிரத்தையெடுத்து தமிழ் மொழிக்கு அவர்கள் உரமிட்டு வருகின்றனர்.
அவர்களில் சிலர் ‘மெப்ஸ்'(MEPS) எனப்படும் பொருளக பண பரிவர்த்தனை இயந்திரங்களில்(ATM) கூட தமிழ் மொழியை பயன்படுத்துகின்றனர் என்பது பாராட்டத்தக்க ஒன்று. அந்த இயந்திரத்தில் தமிழ் மொழி ஒரு விருப்பத் தேர்வாக இருப்பது கூட நிறைய பேர்களுக்குத் தெரியாது.
அதே போல நாம் அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் புலனத்தைக் கூட தமிழில் இயக்குவதற்கான விருப்பத் தேர்வு உள்ளது எனும் விவரம் ஒரு சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் குறிப்பிட்ட ஒரு சாரார் அதனையும் தமிழிலேயே பயன்படுத்துவது பெருமைக்குரிய ஒரு விஷயமாகும்.
ஆக, “தமிழுக்காக போராடுவேன்,” எனும் தோரணயில் கோஷமிடும் மக்களும், அமைதியாக, எவ்வித ஆர்ப்பரிப்புமின்றி அம்மொழியை வளர்த்துக் கொண்டிருக்கும் உண்மையான ‘தமிழ் உள்ளங்களை’ இவ்வேளையில் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.