இலங்கையின் மிக பழமை வாய்ந்த பிரதான கட்சியாக திகழும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று இரண்டாக பிளவுபடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்கும் அதேவேளை, மற்றுமொரு தரப்பினர் சஜித் பிரேமாஸவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான பதவிகளிலுள்ளவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலையில், அந்த கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் புதல்வியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறங்காத பின்னணியில், அந்த கட்சியின் உயர்மட்டம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முன்னர் தீர்மானித்திருந்தது.
எனினும், கட்சியின் ஆலோசகரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பலர் அந்த தீர்மானத்திற்கு எதிராக குரல் எழுப்ப ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்க போவதில்லை எனவும், தான் நடுநிலையாக செயற்படவுள்ளதாகவும் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்ததுடன், கட்சியின் தலைமை பொறுப்பிற்கு பதில் தலைவராக ரோஹண லக்ஷ்மன் பியதாஸவை நியமித்திருந்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்தமையானது முற்றிலும் தவறான விடயம் எனவும், கட்சியிலுள்ள பலர் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு எனவும் கூறி, மற்றுமொரு குழுவினர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்புக்கும் குழுவொன்றை ஸ்தாபித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பு குழு என்ற அமைப்பின் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க செயற்படுவதுடன், அந்த குழுவின் மாநாடு கொழும்பில் நேற்றைய தினம் நடத்தப்பட்டது.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர்களும் பங்குப்பெற்றிருந்தனர்.
இந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
”தாமரை மொட்டு கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு எமது கட்சி சட்ட ரீதியாக முறையான அனுமதியை பெற்றுக் கொள்ளவில்லை. கட்சியின் ஆலோசகரான எனக்கு இதுவரை அந்த தீர்மானம் குறித்து அறிவிக்கப்படவில்லை. மேலும் பல பிரதான பதவிகளை வகித்தவர்களுக்கும் இந்த தீர்மானம் அறிவிக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஷ இரண்டு மூன்று தடவை கட்சியை இல்லாதொழிக்க முயற்சித்தார். எனினும், கட்சியை நாமே காப்பாற்றினோம்,” என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுசிங்க கூறினார்.