“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது” – ஐ.தே.க. புகார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி புகார் பதிவு செய்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக் குழு மற்றும் போலீஸ் மாஅதிபர் ஆகியோரிடம் நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்ரமரத்ன இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

இந்த குண்டுத் தாக்குதல் கிட்டத்தட்ட அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக பாதுகாப்பு சபை கூட்டத்தை கூட்டுமாறும் ஏரான் விக்ரமரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஏரான் விக்ரமரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

என்ன சொல்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தினங்களில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக எந்தவொரு நம்பகமான தகவலும் இல்லாமல், ட்விட்டர் பதிவு ஒன்றை மேற்கோள்காட்டி குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிக்கிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் டளஸ் அழகபெருமவினால், தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு இன்று வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டை தாம் முழுமையாக நிராகரிப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேர்தல் காலங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

92 தடவை வழங்கப்பட்ட அரச புலனாய்வு தகவல்களை பொருட்படுத்தாது, வெளிநாட்டு புலனாய்வு துறையினரின் தகவல்களை பொருட்படுத்தாது, ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் ஊடாக 350திற்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தாக்குதலுக்கு இடமளித்த அரசாங்கத்தின் பங்குதாரராகவுள்ள ஏரான் விக்ரமரத்ன இவ்வாறான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது கேலியான விடயம் என டளஸ் அழகபெரும கூறியுள்ளார்.

நிச்சயம் வெற்றி பெறக்கூடிய கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை இல்லாது செய்வதற்கான முயற்சியாகவே தாம் இதனை அவதானிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் தந்தையான ரணசிங்க பிரேமதாஸ தமது வெற்றியை உறுதி செய்து கொள்வதற்காக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதை நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான ஒரு முயற்சியே தற்போதும் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

அமைதியான தேர்தலை நடத்தும் முயற்சிக்கு தாம் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் டளஸ் அழகபெரும கூறியுள்ளார்.