கே.பியை கைதுசெய்யுமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவு!

ஆயுதங்கள் கடத்தியமை மற்றும் வெடிமருந்துகளை பயன்படுத்தி பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதான ஆயுத கொள்வனவாளரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு சென்னை நீதிமன்றமொன்று அனைத்துலக காவல்துறையினரிடம் (interpol) பிடியாணையொன்றை பிறப்பித்துள்ளது.

இத்தகவலை இலங்கையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார். இப்பிடியாணையின் நகலொன்றையும் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது, ஜயலத் ஜயவர்தன எம்.பி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அண்மையில் தான் சென்னைக்கு பயணம் செய்தபோது, இலங்கை அரசாங்கத்தின் காவலில் கே.பி. இருப்பது குறித்து சென்னை காவல்துறை ஆணையருக்கு தான் தெரிவித்ததாகவும் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கூறினார்.

பயங்கரவாத குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஒரு நபரை இலங்கை அரசாங்கம் வசதி வாய்ப்போடு வைத்திருப்பது ஒரு குற்றமாகும் எனவும் அவர் கூறினார்.

எனினும் இப்பிடியாணை எப்போது நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது என ஜயலத் ஜயவர்தன எம்.பி. கூறவில்லை. இப்பிடியாணையில் கே.பியின் பெயர் தர்மலிங்கம் சண்முகம் குமரன் எனவும் அவரின் பிறப்பிடம் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளை அவர் பேசக்கூடியவர் எனவும் தலைமயிரை பக்கவாட்டில் சீவியிருப்பது அவரின் அடையாளம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதன் 2009-ம் ஆண்டு மலேசியாவில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் சரணடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

TAGS: