பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சாக்கடை அரசியலும் இன, சமய வாதங்களும் பெருக இடமளித்துக் கொண்டிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே கடிந்து கொண்டிருக்கிறது.
“ஹரப்பான் ஆட்சி ஏற்று 19 மாதங்களுக்குமேல் ஆகி விட்டது. அரசாங்கத்திலும் அரசியலிலும் சீரமைப்புச் செய்யப்போவதாக அது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளில் மிகப் பல இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன”, என்று அது ஓர் அறிக்கையில் கூறியது.
“மலேசியா பாருவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் சாக்கடை அரசியலிலும் அதிகாரப் போராட்டங்களிலும் அரசியல் சதிகளிலும் இன, சமய வாதங்களிலும் ஈடுபடுவதைக் காண வெறுப்பாக உள்ளது. இவற்றால் நாட்டின் நிலைத்தன்மை குலைந்து வருவதுடன் மாற்றம் காண விரும்பி வாக்களித்த மக்களும் நம்பிக்கை இழந்து வருகிறார்கள், என்று அது எச்சரித்தது.
“94-வயது பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பதவி விலகியதும் அவருக்கு அடுத்து அப்பதவிக்கு வரப்போவது யார் என்பதன் தொடர்பில் ஒரு பதவிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒரு இரகசியம்தான்.
“அந்த வகையில் ஹரப்பான் தலைவர் மன்றம் தெளிவான ஒரு ஆட்சிமாற்றத் திட்டத்தையும் அதற்கான நாளையும் அறிவித்து அரசியல் நிலைத்தன்மையை உண்டுபண்ண வேண்டும்.
“நமது வெஸ்ட்மின்ஸ்டர் பாணி. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அடுத்து பிரதமராக வரப் போகிறவரைத் தேர்ந்தெடுப்பது நடப்புப் பிரதமரின் வேலை அல்ல, அம்முடிவைச் செய்ய வேண்டியவை அரசாங்கத்தை ஆளும் கூட்டணிக் கட்சிகளே என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
“மக்கள் ஒரு புதிய அரசாங்கத்துக்காகவும் ஹரப்பான் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மாற்றங்களுக்காகவும்தான் வாக்களித்தார்கள். எனவே சீரமைப்புகளைக் குலைக்கும் எந்தவொரு முயற்சியும் மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் துரோகமாகும்”, என்று பெர்சே கூறிற்று.