யுனிமெப் துணை வேந்தர், தேர்வு வாரியம் நீக்கப்பட வேண்டும்-சந்தியாகு வலியுறுத்து

கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, யுனிவர்சிடி மலேசியா பெர்லிஸ்(யுனிமெப்) தயாரித்திருந்த தேர்வுத் தாளில் சர்ச்சைக்குரிய வினாக்களுக்கு இடமளித்த அப்பல்கலைக்கழக துணை வேந்தர் பாட்லிஷா அமாட்டும் தேர்வு வாரியமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இன உறவுகள் தொடர்பான கேள்வித் தாளில் 60வது வினா மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றாரவர்.

அவ்வினாவுக்குப் பக்கத்தில் சாத்தியமான விடைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. விடைகளில் ஒன்று சமயப் பிரச்சாரகர் ஜாகிர் நாய்க் பற்றிக் குறைகூறுவோர் அறியாதவர்கள் என்று கூறியது.

“கல்விக் கழகங்கள் ஒற்றுமையை வளர்க்க வேண்டுமே தவிர வேற்றுமையை அல்ல. அந்த வகையில் துணை வேந்தர் அப்பதவி வகிக்கத் தகுதியானவர் அல்ல. வினாவைப் பரிசீலனை செய்த தேர்வு வாரியமும் இதற்குப் பொறுப்பாகும்”, என்றாரவர

நடந்த தவற்றுக்கு துணை வேந்தர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவரோ சமுதாயத்தை மேலும் பிளவுபடுத்தும் வகையில் ஆண்வமாக பதில் அளித்துள்ளார். எனவே, பல்கலைக்கழகம் பாட்லிஷா-வையும் அவ்வினாக்களுக்கு இடமளித்த தேர்வு வாரியதையும் நீக்க வேண்டும் என்று சந்தியாகு வலியுறுத்தினார்.