இலங்கையின் பாதுகாப்பு, இறையாண்மை, நிலைப்பாடு மற்றும் ஒற்றையாட்சி ஆகியவற்றை பாதுகாக்க வேண்டுமாயின், நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்து, உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது.
நாடாளுமன்ற புதிய கூட்டத் தொடரொன்றை ஆரம்பிக்கும்போது ஜனாதிபதிக்கு ராணுவ மரியாதை அணிவகுப்பு, 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுவது வழக்கமான விடயம் என்ற போதிலும், ஜனாதிபதியின் வேண்டுக்கோளுக்கு இணங்க அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜனநாயக நாடொன்றின் வெற்றிக நிலைமை அந்த நாட்டின் அரசியலமைப்பிலேயே தங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1978ஆம் ஆண்டு முதல் அரசியலமைப்பில் 19 தடவைகள் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசியலமைப்பில் உறுதியற்ற மற்றும் குழப்பகரமான தன்மை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை காரணமாக அரசியலமைப்பில் பல பிரச்சனைகள் காணப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
மேலும், விகிதாசார வாக்கெடுப்பு முறையில் உள்ள ஆக்க முறையிலான லட்சணங்களை பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை, நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டினையும் மக்களின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்காக தற்கால தேர்தல் முறையில் மாற்றம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கங்களினால் தேர்தல்களை வெல்லக் கூடியதாகவிருப்பினும், தெளிவான தீர்மானங்களை எடுக்க முடியாத அடிப்படைவாதத்தில் அழுத்தங்களுக்கு தொடர்ந்து கீழ்படியும் நிலையற்றதொரு நாடாளுமன்றம் நாட்டிற்கு பொருத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் இறையாண்மையை உறுதி செய்கின்ற வலுவான சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் சுயாதீன நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதை சட்ட ரீதியான மாற்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மக்களை சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படும் கௌரவமான இனமாக்குவது தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கொள்கை பிரகடன உரை தொடர்பில் மூன்று தின விவாதம் தேவை என ஐக்கிய தேசியக் கட்சி, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு விவாதத்தை நடத்த அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, ஜனவரி மாதம் 7, மற்றும் 8ஆம் தேதிகளில் விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.