தை பொங்கல் வாழ்த்து – சேவியர் ஜெயக்குமார்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. விவேகமான உழைப்புடன், விழிப்புணர்வோடு மக்கள் ஒன்று பட்டு செயல் பட்டால் நாம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் வழி நன்னிலையை பெற இயலும் என்கிறார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

தை புத்தாண்டு மற்றும் பொங்கலைக் கொண்டாடும் எல்லா மக்களுக்கும் இனிய தை புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் தனது மகிழ்ச்சியைக் தெரிவித்த அவர், நடப்பு அரசாங்கம் ஓர் இக்கட்டான சூழலில் இயங்குவதாகவும், அதன் வழி மக்களை மையமாக கொண்ட ஒர் ஆட்சிமுறை உண்டாக இன்வாதமற்ற சூழல் தேவை என்பதையும் வழியுறுத்தினார்.

மலேசியர்களின் முதல் எதிரி இனவாத அம்னோ என்பதே இந்நாட்டு எதிர்க்கட்சிகளின் நீண்ட நாளைய குற்றச்சாட்டு, அன்று அதனை ஏற்காத மக்கள், இப்பொழுது, இந்நாட்டின் உண்மையான எதிரியை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாட்டில் இன, சமய, மொழி ரீதியான வாதங்கள் வலுவடையவும் ஓங்கி ஒலிக்கவும் அம்னோவும், அது சார்ந்த அமைப்புகளும் முக்கியக் காரணிகளாக விளங்கி வருகின்றன.

இன்றைய அரசுக்குத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடப்பாடு உண்டு. சில வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாமலிருக்கலாம், ஆனால் அவை தற்காலிகமான பின்னடைவேயாகும். அரசாங்கம் அதனை விரைவில் சீர்செய்யும் என்ற நம்பிக்கை உண்டு என்கிறார் சேவியர்.

கல்வித்துறையில் தொழில் பயிற்சிகளில் அரசாங்கம் நிறைய வாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்து வருவதால் இளைஞர்கள் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர் என்ற குறுகிய வருமானப் பிரிவிலிருந்து வெளி வந்த சமுதாயமாக நாம் மலர வேண்டும் என்றார் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான  டத்தோ  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.