2019ம் ஆண்டில் மட்டும் இலங்கையில் 361 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை வரலாற்றில் ஒரே ஆண்டில் பதிவான அதிகபட்ச யானைகள் இறப்பு இதுதான் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றில் பெரும்பாலான யானை மரணங்கள் மனிதர்களால் நிகழ்த்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இலங்கையிலுள்ள காடுகளில் மொத்தம் 7,500 யானைகள் இருப்பதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் யானைகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம், எனினும் காடுகளிலிருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் வரும்போது பிரச்சனை வெடிக்கிறது.
இலங்கையில் யானைகள் போற்றப்படுகின்றன, ஆனால் சில விவசாயிகள் அவற்றை அழிவை ஏற்படுத்த கூடிய ஒன்றாகவே பார்க்கிறார்கள்.
இலங்கையில் கடந்த ஆண்டு நேர்ந்த யானைகளின் உயிரிழப்புகளில், 85 சதவீதத்துக்கு மனிதர்களின் நடவடிக்கைகளே காரணம் என்று பிபிசியிடம் கூறுகிறார் அந்நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான சஞ்சீவ சமிக்கரா.
மின்வேலிகள், நஞ்சு, உணவுகளில் மறைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்கள் ஆகியவற்றின் மூலம் மனிதர்கள் யானைகளை கொல்வதாக அவர் மேலும் கூறுகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஏழு யானைகள் கொல்லப்பட்டதற்கு உள்ளூரை சேர்ந்தவர்கள் தங்களது பயிர்களை பாதுகாப்பதற்காக நஞ்சு கொடுத்ததே காரணமாக இருக்கலாம் என்று இலங்கை வனத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.
இலங்கை முழுவதும் காடுகளை ஒட்டிய பகுதிகளில் மனிதர்களின் இடப்பெயர்வு அதிகரித்து வருவதால், காடுகளில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் யானைகள் ஊருக்குள் வருவதாக கூறுகிறார் பிபிசி தெற்காசியப் பிரிவு ஆசிரியர் அன்பரசன் எத்திராஜன்.

























