பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிக்கு உயிரிழப்பு

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹுங்கம பிரதேசத்தில் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்ற பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் அவ்வீதியில் பயணித்த வேனில் இருந்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த 21 வயது பிக்கு, அங்குனுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

உயிரிழந்த பிக்குவின் சடலம் தற்போது அங்குனுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபடும் நபர் என,  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.