வெட்டுக்கிளியால் பேரழிவு: சோமாலியாவில் அவசர நிலை

மொகதிசு: சமீபத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாய விளை நிலங்களை லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தாக்கி அழித்தன. ‘காப்பான்’ என்ற தமிழ் திரைப்படத்தில், விவசாயத்தை அழிக்க, ஒரு நிறுவனம் வெட்டுக்கிளிகளை ஏவி விடும். இதை உதாரணமாகக் காட்டி, ‘பாகிஸ்தான் தான் குஜராத்திற்கு வெட்டுக்கிளிகளை அனுப்பியுள்ளது’ என, சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியாவையும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தாக்கத் துவங்கியுள்ளன.

ஏப்ரல் மாதம் சோமாலியாவின் ஜூபா நதியின் படுகையில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. இந்நிலையில், விவசாயப் பயிர்களை லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. இதைத் தேசிய அவசர நிலையாக சோமாலிய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.

போர்க்கால அடிப்படையில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை துவக்கியுள்ளனர். ஓரிரு வாரத்திற்குள் இந்த நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தால் மட்டுமே, அந்நாட்டு விவசாயிகளைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியும்.