‘ஓம் நம சிவாய’ கோஷத்துடன் பிரகதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்; தஞ்சையில் கோலாகலம்!

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில், இன்று மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. காலை, 9:30 மணிக்கு, பெரிய கோவில் விமானம் மற்றும் கோபுரங்களில், புனித நீர் ஊற்றப்பட்டது. 10:00 மணிக்கு, மூலவர் பெருவுடையாருக்கு, அபிஷேகம் நடந்தது. லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளதால் தஞ்சை மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற, தஞ்சை பெரிய கோவிலின், மஹா கும்பாபிஷேக விழா, 23 ஆண்டுகளுக்கு பின், இன்று நடந்தது. இதற்காக, ஓராண்டுக்கும் மேலாக, இந்திய தொல்லியல் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத் துறை என, பல்வேறு தரப்பினரும், தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

கும்பாபிஷேகத்துக்காக, கடந்த மாதம், 27ம் தேதி பூர்வாங்க பூஜையும், 31ம் தேதி வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் இருந்து, புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. பிப்ரவரி, 1ல், புனித நீர் அடங்கிய குடங்கள், யாகசாலை மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, நேற்று காலை, ஆறாவது கால யாகசாலை பூஜையும், மாலை, ஏழாவது கால யாகசாலை பூஜையும் நடந்தன.

யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாள், 41 உற்சவ மூர்த்திகள், எட்டு பலி பீடங்கள், 10 நந்தி, 22 கோவில் கலசம் என, 405 சுவாமிகளுக்கும் உரிய, 705 குடங்களை, வேதிகையில் வைத்து, வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக நாளான, இன்று அதிகாலை, 4:30 மணிக்கு, எட்டாவது கால யாகசாலை பூஜையும், நாடி சந்தனமும், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானமும் நடந்தது.

காலை, 7:25 மணிக்கு, யாகசாலை மண்டபத்தில் இருந்து, புனித நீர் குடங்கள் புறப்பட்டு, காலை, 9:30 மணிக்கு, பெரிய கோவில் விமான மற்றும் கோபுரங்களில், புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. 10:00 மணிக்கு, மூலவர் பெருவுடையாருக்கு, அபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும்; இரவு, பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலாவும் நடக்கின்றன.

தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் வேத மந்திரங்கள் ஓத ராஜகோபுரம், விமானங்களின் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது கூடி இருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் ‘ஓம் நம சிவாய’ கோஷம் விண்ணை பிளப்பதாக அமைந்திருந்தது. கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

‘கும்பாபிஷேகத்திற்கு, ஐந்து லட்சம் பக்தர்கள் வருவர்’ என, மாவட்ட நிர்வாகம் எதிர்பார்த்ததால் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு, மூன்று வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தெற்கு வாயில் வழியாக, வி.ஐ.பி.,க்களும், பொது மக்களும் அனுமதிக்கப்பட்டனர். வி.ஜ.பி.,க்களுக்கு, ஐந்து இடங்களும்; பொதுமக்களுக்கு, ஏழு இடங்களும் தேர்வு செய்யப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

இவர்கள், தரிசனம் முடிந்த பின், தெற்கு வாயிலின் மேற்கு பகுதியில், வெளியேற வேண்டும்.வி.வி.ஐ.பி.,க்கள் சிவகங்கை பூங்கா, யாகசாலை பந்தல் வழியாக உள்ளே வந்து, தரிசனம் முடிந்து, மேற்கு வாயில் வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் அனைவரும், ‘மெட்டல் டிடெக்டர்’ சோதனைக்கு பின், கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு பணியில், 4,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கும்பாபிஷேக விழாவின் அனைத்து நிகழ்வுகளையும், கோவிலுக்குள், ஒன்பது இடங்களில், கேமராக்கள் பொருத்தி, சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய, விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், ‘யூ – டியூப்’ வலைதளத்தில், ‘தஞ்சை வீடியோஸ்’ என்ற முகவரியிலும், கும்பாபிஷேக விழா, நேரலையில் ஒளிபரப்பானது.

பெரிய கோவிலின், 216 அடி உயரத்தில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்ற, உச்சிக்கு செல்ல சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், ‘வீடியோ, போட்டோ’ எடுப்பவர்கள் என, ஏழு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் நேற்று, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் முழுவதும், விழாக்கோலம் கண்டுள்ளது. தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் கூட்டம் அலைமோதுகிறது.

-dinamalar