கொரோனா வைரஸ் குறித்து தொடக்கத்திலேயே எச்சரித்த மருத்துவர் ஒருவரை சீன போலீஸார் மிரட்டிய சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது.
இப்போது அந்த மருத்துவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
நடந்தது என்ன?
வுஹான் நகரத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில், ஜனவரி மாத தொடக்கத்தில் தீவிரமாக இறங்கினர் சீன அதிகாரிகள்.
இது குறித்து மருத்துவர் லீ வெண்லியாங் சக மருத்துவர்களிடம் எச்சரித்து இருக்கிறார். ஆனால், இப்படியான தகவல்களை பகிர்வதை நிறுத்தும்படி சீன போலீஸார் கூறியுள்ளனர்.
இது குறித்த தகவல்களை அவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
“அனைவருக்கும் வணக்கம், நான் கண் மருத்துவர் லீ, வுஹான் சென்ட்ரல் மருத்துவமனையில் பணியாற்றுகிறேன்,” என தொடங்கும் அந்த பதிவை மருத்துவமனை படுக்கையில் இருந்தப்படி பகிர்ந்திருக்கிறார்.
டிசம்பர் இறுதியில் வைரஸால் தாக்கப்பட்ட பல நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். இது சார்ஸ் வைரஸாக இருக்கலாம் என சந்தேகித்து இருக்கிறார். ஆனால், இது புதிய கொரோனா வைரஸ் என அவருக்கு தெரியவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி, சக மருத்துவர்களை எச்சரித்த அவர், முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பின்னர் வந்த பொது சுகாதார துறை அதிகாரிகள், சமூக ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் இவ்வாறான பொய் தகவல்களை பகிர்வதை நிறுத்தும்படி கூறி, அவரிடமிருந்து ஒரு கடிதத்தையும் பெற்று சென்று இருக்கிறார்கள்.
பின்னர் போலீஸும் அவரை விசாரித்து, வதந்திகளை பரப்புவதை நிறுத்தும்படி கூறி இருக்கிறார்கள்.
இதனை ஜனவரி மாதம் பகிரப்பட்ட அந்த பதிவில் லீ குறிப்பிட்டு இருக்கிறார். பின்னர் இவருக்கும் அந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
கதாநாயகன்
ஜனவரி 10ஆம் தேதியிலிருந்து அவருக்கு தொடர் இருமல் ஏற்பட்டிருக்கிறது. பின் சோதித்து பார்த்ததில் அவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது அரசு அதிகாரிகள் லீயிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இப்போது சீனாவில் லீ கதாநாயகனாக கொண்டாடப்பட்டு வருகிறார்.
சீன சமூக ஊடகமான வெய்போவில் இவரை பாராட்டி பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவின் சுகாதாரத் துறைக்கு லீ போன்ற லட்சக்கணக்கான மருத்துவர்கள் தேவை என குறிப்பிடும் அவர்கள் சீன சுகாதாரத் துறை குறித்த வருத்தங்களையும் பகிர்ந்துள்ளனர்.
“நாளை புதிய வைரஸ் பரவுவதை யாரேனும் மருத்துவர்கள் கண்டறிந்தால், அதுகுறித்து வெளியே சொல்லவே அஞ்சுவார்கள்” எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
-BBC