அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 18.3 செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது.
எஸ்பெரான்சா என்னும் அர்ஜெண்டினா ஆய்வு மையம் வியாழக்கிழமை அன்று எடுத்த தட்பவெட்ப அளவின்படி, இதுவரை வெப்பம் அதிகமாக இருந்த 2015 மார்ச் மாதத்தை காட்டிலும் 0.8 செல்சியஸ் அதிகரித்துள்ளது. 2015 மார்ச் மாதம் 17.5 செல்ஷியஸாக இருந்தது. அதுவே அண்டார்டிகாவில் இதுவரை பதிவான அதிக அளவு வெப்பமாகும்.
இந்த வெப்பம் பதிவான அண்டார்டிகா தீபகற்பமே அண்டார்டிகா கண்டத்தின் வடக்கு முனையில் இருக்கும் பகுதியாகும். இதுதான் உலகத்தில் அதிக விகிதத்தில் வெப்ப நிலை அதிகரிக்கும் பகுதியாகும்.
இது ஐக்கிய நாடுகள் அவையின் உலக வானிலை ஆய்வு நிறுவனத்தினால் உறுதி செய்யப்பட்ட தகவல் ஆகும்.
வெயில் காலத்தில் கூட இந்த அளவு வெப்பம் அண்டார்டிகாவில் பதிவாகாது என உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் க்ளர் நல்லிஸ் ஜெனிவாவில் கூறியுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளில் அண்டார்டிகாவில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகியுள்ளது. மேலும் அங்கே மேற்கு கடற்கரையில் இருக்கும் 87% பனிப்பாறைகள் இதுவரை உருகியுள்ளன என உலக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகுவது அதிமாகியுள்ளது எனவும் உலக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் துருவத்தில் புவி வெப்பமாதலால் அதிக அளவில் பனிப்பாறைகள் உருகுகின்றன. இது பூமியில் நூற்றாண்டுக்கு 10 அடியாக கடல் மட்டத்தை உயர்த்துகிறது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
1979ல் இருந்து 2017 வரை அண்டார்டிக் பனிப் படுகையில் பனி உருகுவது சுமாராக ஆறு மடங்கு அதிகரித்துள்ளது எனவும் நல்லிஸ் கூறினார்.
இந்த அளவு பனி உருகுகிறது என்றால் கடல் மட்டம் அந்த அளவு உயரும். ஆகவே நாம் பிரச்சனையில் இருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது எனவும் அவர் கூறினார்.
அண்டார்டிகா கண்டத்தின் அதிக வெப்ப அளவு 18.3 செல்சியஸ். ஆனால் அதனோடு வரும் தீவுகள், கடல் மற்றும் கண்டம் என அனைத்தையும் பார்க்கும்போது 1982 ஜனவரியில் பதிவான 19.8 செல்சியஸ்தான் அதிக வெப்ப அளவு ஆகும்.
கடந்த ஜூலை மாதம் ஆர்க்டிக் தீவுகளில் வடக்கு முனையில் இருக்கும் எல்ஸ்மேர் தீவுகளில் பதிவாகியுள்ள வெப்பம் அதன் சொந்த அதிக வெப்பமளவான 21 செல்சியசை கடந்தது.
- bbc.tamil